Vijay - அரசியல் என்ட்ரி.. ரஜினிக்கு ஃபோன் செய்த விஜய்.. இதுதான் பேசினார்களா?.. ஓஹோ விஷயம் அப்படி போகுதோ
சென்னை: நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கினார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு விஜய்யின் இந்த அதிரடி முடிவு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பலரும் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவரும் சூழலில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் விஜய்க்கு வாழ்த்து என்று ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்துக்கு விஜய் ஃபோன் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்ததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார். அதேசமயம் நலத்திட்ட உதவிகள் செய்வதை விஜய் மக்கள் இயக்கம் நிறுத்தவில்லை. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது.

அரசியல் என்ட்ரி: இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு நோ: கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடவே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக பெரும்பாலானோர் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுக்கு நோ: விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்குவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவதை அவ்வளவாக விரும்பவில்லை. சிறந்த எண்ட்டெர்டெயினர் விஜய். அதற்குள் அவரது ERA முடிந்துவிட்டதா என்று நம்ப முடியாமல் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.
ரஜினியின் வாழ்த்து: சூழல் இப்படி இருக்க விஜய்யின் அரசியல் வருகை குறித்து அரசியலுக்கு வராத ரஜினிகாந்த்தின் கருத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலரிடம் இருந்தது. வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஆந்திராவுக்கு சென்ற ரஜினியிடம், விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'விஜய்க்கு என்னுடைய வாழ்த்து' என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் செய்த ஃபோன்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ரஜினிகாந்த்துக்கு விஜய் ஃபோன் செய்திருக்கிறாராம். அந்த ஃபோனில் தனக்கு வாழ்த்து சொன்னதற்காக விஜய் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டாராம். அந்த சமயத்தில் விஜய்க்கு சில அட்வைஸ்களையும் ரஜினி கூறியதாக பேச்சு எழுந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய்க்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தால் செமயா இருக்குமே என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஒரு படத்தில் நடிக்கும் அவர் அதோடு சினிமாவிலிருந்து ஒதுங்குகிறார். அந்தப் படத்தை அநேகமாக வெற்றிமாறன் இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அது சமூக அக்கறை கொண்ட கதையாக உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











