அரசியல் கட்சிகளை சூடாக்கிய விஜய்யின் அட்டாக் வசனங்கள்! தளபதி வேற லெவல்.. என்னாமா பேசியிருக்காரு!
சென்னை: பொதுவாக ஒரு சொலவடை சொல்வாங்க," சும்மா இருக்கறவன எதுக்குடா சீண்டீட்டே இருக்கீங்க, சாது மிரண்டா காடு கொள்ளாது" இப்படியான வார்த்தைகள் விஜய்க்கு நன்றாகவே பொருந்திப் போகும். 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அதிமுக கொடுத்த ஏகப்பட்ட குடைச்சல்கள் இன்றைக்கு விஜய்யை அரசியல் களத்திற்குள் அழைத்து வந்துள்ளது. இது குறித்து அவரது 50வது பிறந்த நாளில் விரிவாக பார்க்கலாம்.
உங்கள் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர்தான் நடிகர் விஜய். அதன் பின்னர் இளையதளபதி என்ற அடைமொழி ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. விஜய் நேரடியாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியது 2024ஆம் ஆண்டாக இருந்தாலும், தனது அரசியல் வருகைக்காக விஜய், அடித்தளம் அமைக்க ஏற்படுத்திக் கொள்வதற்கு மட்டும் எடுத்துக் கொண்ட காலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எனக் கூறலாம்.

தலைவா பட பிரச்னை: கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய்யின் ரசிகர்கள் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. ஆனால் விஜய் எந்த பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை. அந்த தேர்தலில் அதிமுக பிரமாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. அதற்கு திமுக மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியும் ஒரு காரணம். 2013ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் இருந்து விஜய்க்கு பிரச்னை தொடங்கியது. தலைவா படத்தின் டைட்டில் கார்டில் " தலைவா - டைம் டூ லீட்" என டைட்டில் லீட் இருந்தது.

தற்கொலை செய்து கொண்ட ரசிகர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மனதில் உறுத்தலை ஏற்படுத்தியது. இதன்காரணமாக படத்தினை ரிலீஸ் செய்வதில் பிரச்னை கொடுத்தார். தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் நஷ்டத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பல கட்டங்களாக சந்திக்க முயற்சி செய்தார். போயஸ் கார்டன் வாசலிலேயே காத்திருந்தார். ஆனால் ஜெயலலிதா விஜய்யை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவின் அப்போதைய கைதேர்ந்த அமைச்சர்கள் நான்கு பேரை அனுப்பி படம் பார்க்கச் சொன்னார் ஜெ. அதன் பின்னர்தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்குள் படம் ரிலீசாகாத ஏமாற்றத்தில் கோவை துடியலூரைச் சேர்ந்த விஷ்ணு என்ற ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது விஜய்யை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

தொடர் குடைச்சல்: தலைவா படத்தில் இருந்துதான் விஜய் படங்களுக்கு குடைச்சல் கொடுப்பது ஆரம்பமானது. குறிப்பாக விஜய் படங்கள் ரிலீஸிக்கு வரும்போது எதாவது வழக்கு போட்டு படக்குழுவினருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். கத்தி படம் அறிவிக்கப்பட்டபோதே பிரச்னை தொடங்கியது. இம்முறை படத்தை கைகாட்டாமல் படத்தயாரிப்பு நிறுவனத்தை கைகாட்டினார்கள். லைகா நிறுவனம் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்த நிறுவனம். அவர்கள் இங்கு படத்தயாரிப்பில் ஈடுபடக்கூடாது எனக் கூறினார்கள். ஆனால் இந்த பிரச்னையும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

திமுக எதிர்ப்பு: இந்த சீண்டல்களுக்கு எல்லாம் விஜய்யும் பதிலுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து வந்தார். கத்தி படத்தில் நேரடியாகவே திமுக, காங்கிரஸ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டான 2ஜி விவகாரத்தை ஊடகங்கள் முன் பேசும் காட்சியில் விமர்சித்தார். அதேகாட்சியில் கடன் வாங்கிய பியர் கம்பெனி ஓனர் கடனை கட்டமுடியலனு கையத்தூக்குறான். ஆனால் விவசாயம் பண்ண கடன் வாங்குன விவசாயி, கடன கட்டமுடியாம பூச்சி மருந்து குடுச்சு சாகறான்" என்ற வசனம் மக்களிடம் பாராட்டுகளைக் குவித்தது. மேலும் மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த பாஜகவையும் சீண்டியது. அந்த படத்தில் கம்யூனசத்திற்கு தனி விளக்கமே கொடுத்திருந்தார்.

பாஜக எதிர்ப்பு: அதன் பின்னர் இவரது படங்களில் அரசியல் பேசப்பட்ட படம் என்றால் அது மெர்சல் தான். இந்த படத்தில் இருந்துதான் இளைய தளபதி விஜய்யில் இருந்து தளபதி விஜய் ஆனார். இந்த படத்தில் தனியார் மருத்துவமனைக் கொள்ளை, ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றை ஊடகங்கள் முன்னர் பேசும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் முருகதாஸ். இந்த காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு குவிந்தது மட்டும் இல்லாமல், பாஜகவினரின் எதிர்ப்பையும் சம்பாதிக்கச் செய்தது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பெரிய செல்வாக்கு இல்லாததால், பாஜகவினரின் எதிர்ப்பு விஜய்க்கு சாதகமாக அமைந்தது.

அதிமுக எதிர்ப்பு: திமுக, காங்கிரஸ், பாஜக என இந்த மூன்று கட்சிகளையும் நேரடியாகவே விமர்சித்த விஜய்க்கு மீதமிருந்தது அதிமுகதான். இதனால் அதிமுகவை நேரடியாக தாக்கும் வகையில் சர்கார் படத்தை எடுத்திருப்பார்கள். படம் முழுவதும் அதிமுகவை விமர்சிக்கும் காட்சிகள் நீண்டு கொண்டே இருந்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.வின் இயற்பெயரான கோமளவள்ளி என்ற பெயரில் வரலஷ்மி சரத்குமார் நடித்திருப்பார். இந்தப் படத்தை திமுகவுக்கு நெருக்கமான சன் பிக்ஸ்ர்ஸ் தயாரித்தது. படம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இலவசங்கள் குறித்தான வசனங்கள் சர்ச்சைக்குள்ளானது.
சி.எம். விஜய்: இந்தப் படத்தில் ஒவ்வொருது துறையையும் விஜய் விமர்சித்து பேசும் காட்சிகளுக்கு தனி வரவேற்பே இருந்தது. சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது கூட, " இந்த படத்தில் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்" எனக் கூறி ரசிகர்களை தேர்தலுக்கு ஆயத்தமாக்கினார். அதன் பின்னர் வெளியான பிகில் படத்தில்," கேப்டன் மைக்கேல் என்பதை சி.எம்., சுருக்கி வைத்துக்கொண்ட காட்சிகளும் இடம் பெற்றது. இந்த படம் விளையாட்டுத்துறையில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து பேசியது. மாஸ்டர் படம் போதைப்பொருள் விற்கும் சமூக விரோத கும்பலை ஒடுக்கும் கதாபாத்திரமாக விஜய் நடித்திருப்பார். பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் அவர்கள் அணியும் ஆடை எனக் கூறுவதை எதிர்த்தும் வசனங்கள் பேசியிருப்பார்.
திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா இசை வெளியீட்டுவிழா? அதன் பின்னர் வந்த பீஸ்ட் படம் தெளிவான அரசியலை பேசவில்லை என்றாலும், தனது படங்களின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் தனது ரசிகர்களை பட்டை தீட்டி வந்ததை கட் செய்யவே பீஸ்ட் படத்திற்கு படக்குழு இசை வெளியீட்டு விழாவை நடத்தவேயில்லை என்ற தகவல் இப்போதும் உலா வருகின்றது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட, நான் முதலமைச்சர் ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜை போதைப்பொருள் ஒழிப்புத்துறை அமைச்சராக நியமிப்பேன் எனக் கூறினார்.
கட்சி தொடக்கம்: இப்படி சினிமாவில், சினிமா மேடைகளில் அரசியல் கருத்துகளை பேசிவந்த விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி நேரடியாக அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் கூறியுள்ளார். ஒரு கட்சி தொடங்கிய பின்னர் ஒரு கட்சியின் தலைவராக விஜய் திமுக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர், நேரடியாக கள்ளக்குறிச்சிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னர் நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தார்.
50வது பிறந்த நாள்: தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தால் தமிழ்நாடே அதிர்ச்சியில் உள்ள நிலையில் தனது 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அரசியல் கட்சித் தலைவராக தனது பிறந்த நாளை கொண்டாடவேண்டாம் என கூறியுள்ளார். அதேநேரத்தில் தி கோட் படத்தின் அப்டேட்களும் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளதும் கவனம் பெற்றுள்ளது. சினிமாவில் சர்கார் நடத்திய விஜய் அரசியலிலும் சர்கார் அமைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











