எல்லோருக்கும் பிடித்த தளபதியாக இருப்பது எப்படி? நண்பா, நண்பிகளுக்கு விஜய் எடுக்கும் மாஸ்டர் கிளாஸ்!
சென்னை: உங்கள் விஜய்.. இளைய தளபதி விஜய்.. தளபதி விஜய்.. என வளர்ந்து வந்தவர் தற்போது தலைவர் விஜய்யாக மாறி நிற்கிறார். இந்த இடத்திற்கு விஜய் எளிதாக வந்துவிடவில்லை. அதற்காக அவர் எதிர்கொண்ட இன்னல்களைச் சொல்லி மாளாது. அப்படி இருந்தும் விஜய் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரிடம் இருக்கும் குணநலன்கள் தான். தனது குணநலன்கள் மூலம் அவர் தனது ரசிகர்களுக்கு அட்டகாசமான வாழ்வியல் பாடத்தை எடுத்துக் கொண்டு உள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
முதல் கல்: விஜய் மீது எறியப்படுகிற முதல் கல் என்றால் அது, ' விஜய்யை வளர்த்து விட்டவர் அவரது அப்பா எஸ்.ஏ. சி.' எனக் கூறுவார்கள். ஆனால் இந்த முதல் கல்லையே தனது திரைப்படங்கள் மூலம் சிக்ஸருக்கு விளாசிய சச்சின் தான் விஜய். தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் தங்கள் வாரிசுகளை ஸ்டார்களாக மாற்ற வேண்டும் என போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த போராடத்தில் தோல்வியைச் சந்தித்தவர்களும் உள்ளார்கள். விஜய்யை கையைப் பிடித்து அழைத்து வந்தது அவரது தந்தை தான் என்றாலும் அதன் பின்னர் தன்னை ஒரு ஜாம்பவானாக மாற்றியது விஜய்யின் கடின உழைப்புதான். விஜய் மீது வைக்கப்படும் இந்த நெபோடிச விமர்சனம், சூர்யா மீதோ, தனுஷ் மீதோ, சிம்பு மீதோ அல்லது மற்ற வாரிசு நடிகர்கள் மீதோ வைக்கப்படுவதில்லை என்பது கவனிப்பவர்களுக்கு தெரியும். இப்படியான விமர்சனங்களை எதிர் கொண்டுதான் தன்னை இளைய தளபதி விஜய்யாக நிலை நிறுத்திக் கொண்டார்.

தைரியம்: நடிகர் விஜய் ஒரு கட்டத்திற்கு மேல் ஜனரஞ்சகமான படங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்துவிட்டார். தனது படங்கள் மூலம் சமூகத்திற்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்ற முடிவில், கதைகளை தேர்வு செய்து படங்களில் நடித்தார். அதனால் பல அரசியல் நெருக்கடிகளையும் விஜய் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எந்த நடிகருக்கும் இல்லாத தொல்லை விஜய்க்கு மட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால், எதற்கும் அசராமல், தைரியத்துடன் நின்று விளையாடினார் என்றுதான் கூறவேண்டும். இந்த காலகட்டம் தான் அவரை இளைய தளபதியில் இருந்து தளபதியாக மாற்றியது. இது மட்டும் இல்லாமல் ஈழத் தமிழர் பிரச்னையில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது, தனது ரசிகர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய தைரியசாலி விஜய். அந்த தைரியம் தான் அவரை இன்றைக்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக மாற்றியுள்ளது.
Ignore: விஜய் சினிமாவில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்தே விமர்சனங்கள் தான். அவரது உருவத்தைப் பார்த்து கிண்டல் அடிக்காதவர்கள் குறைவு. அப்படியான விமர்சனங்களை கடந்து வந்த விஜய் பல விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. குறிப்பாக நடிகை த்ரிஷாவுடன் அவரை சேர்த்து வைத்து பலரும் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இது போன்ற நெகட்டிவிட்டி விமர்சனங்களை தவிர்த்து வருகிறார். அதை அவர் தவிர்ப்பதுதான் நல்லதும் கூட. ஆனால் சில இடங்களில் பேசும்போது அவர் மீதான அவதூறான விமர்சனங்களுக்கு சாட்டையடி பதிலைக் கொடுத்துவிடுகிறார். சாட்டையடி பதில்களாக இருந்தாலும் அதை நாகரீகமாகவும் ஒழுக்கமாகவும் கொடுத்து விடுகிறார். அவரது ரசிகர்களும் அதுபோலவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

அன்பு: நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான், அவர் எங்கு பேச ஆரம்பித்தாலும் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி என கூறி உரையைத் தொடங்குகிறார். அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர் ஏன் திடீரென அரசியல், அதுவும் சினிமாவை மொத்தமாக விட்டுவிட்டு எனக் கேட்டபோது, " போதும்பா... எனக்கு ரொம்ப கொடுத்துட்டாங்க.. அவங்களுக்கு நான் ஏதாவது திருப்பிச் செய்யனும் என்றால் அதற்கு அரசியல் சரியாக இருக்கும்" என பதில் அளித்தார். இந்த அளவுக்கு தனது ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர் விஜய்.
எளிமை: விஜய்தான் இன்றைக்கும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். ஆனால் தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற தலைக்கனம் அவரிடத்தில் இருந்ததில்லை என அவருடன் பணியாற்றிய திரைப்பிரபலங்கள் கூறியுள்ளார்கள். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் போது கூட நாள் முழுவதும் பொறுமையாக நின்று அனைவருக்கும் உதவித்தொகை வழங்கினார். இது மட்டும் இல்லாமல், பள்ளிக் குழந்தைகள் செய்த சின்னச் சின்ன குறும்புகளுக்கு கோபப் படாமல் மிகவும் பொறுமையாக இருந்தார். அதேபோல் பல இடங்களில் அவர் பேசும்போது, தன்மையாக பேசுவது, சக மனிதர்களை மரியாதையாக நடத்துவது என அவரது எளிமைக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ரசிகர்கள்: இப்படி விஜய்யிடம் இருந்து அவரது ரசிகர்கள் கற்றுக் கொண்டு அவற்றை தங்களது வாழ்க்கையிலும் பின்பற்ற பல விஷயங்கள் உள்ளன. விஜய் எதையும் சொல்லாமலே தனது இயல்பின் மூலம் தனது ரசிகர்களுக்கு மாஸ்டர் கிளாஸ் எடுத்து வருகிறார். இதனை ரசிகர்கள் புரிந்து கொண்டு அதனை தங்களது வாழ்க்கையிலும் பின் பற்றினால் அனைவருக்கும் தங்களது வாழ்க்கையில் வெற்றியாளராக மாற முடியும் பேரன்பைப் பெற முடியும் .
தலைவர்: இன்றைக்கு விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரது ரசிகர்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்கள். சிலர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அவரது கட்சியில் இணைந்துள்ளார்கள். விஜய் இன்றைக்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் அனைவருக்குமான தலைவராக மாறுவாரா இல்லையா என்பதற்கு காலம் பதில் சொல்லிவிடும். அதற்கு விஜய் தன்னிடம் இப்போது இருக்கும் குணங்களோடு மேலும் சில குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். அதனை அவருக்கு அரசியல் களமும் எளிய மக்களும் கற்றுக் கொடுப்பார்கள். உங்கள் விஜய்யாக திரை வாழ்க்கையைத் தொடங்கி, இளைய தளபதியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, தளபதியாக தனக்கான படையை உருவாக்கிய விஜய், இன்றைக்கு அந்த படைக்கு தலைவராகவும் மாறியுள்ளார். அவரது ரசிகர்கள் அவரைச் சரியாக பின் தொடர்வார்கள் என நம்பலாம்.



Click it and Unblock the Notifications











