இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அஜர்பைஜானில் முதல்கட்ட ஷூட்டிங் நடந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையே அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு பூரணமாக குணமடைந்த அவர் பைக் டூர் சென்றார். அந்த டூரை முடித்த பிறகு விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர் ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். அநேகமாக இன்னும் சில வாரங்களில் மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது.
மருத்துவமனையில் அனுமதி: இப்படி விடாமுயற்சியை சுற்றி பல தகவல்கள் சுற்றிக்கொண்டிருக்க ஏகே ரசிகர்களின் தலையில் இடி இறங்கும்படி கடந்த மாதம் ஒரு தகவல் பரவியது. அதன்படி அஜித் தனது உடலை முழு பரிசோதனை செய்வதற்காக சென்றபோது அவருக்கு காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறிய அளவிலான வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பைக் டூர்: உடல்நலம் தேறிய அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு டூர் கிளம்பினார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் உடன் சென்றிருக்கின்றனர். பைக் டூரின்போது அஜித் பிரியாணி செய்தது, பில்லியர்ட்ஸ் விளையாடியது உள்ளிட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டாகின. இருந்தாலும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் குறித்து அஜித் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர்.
புதிய தகவல்: அதன்படி ஏப்ரல் 10ஆம் தேதி மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கமிட்டாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். எனவே அதற்குள் விடாமுயற்சி ஷூட்டிங்கை முடிக்கும்படி அஜித் கேட்டுக்கொண்டதாகவும்; ஏப்ரல் 10ஆம் தேதி ஷூட்டிங்கை தொடங்கி ஒரேகட்டமாக முடிக்க லைகா திட்டமிட்டிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
மீண்டும் பைக் டூர்?: இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நிச்சயம் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. அதாவது அவர் வட மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் அஜித், பைக் டூர் செல்லும்போது அணியும் உடையை அணிந்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ ஏகே மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரோ; அப்போ விடாமுயற்சி படத்தின் நிலைமை என்னவென்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











