எத்தனை படங்களுக்கு கூப்பிட்டேன் ஏன் வரல?.. தக் லைஃப் கேமராமேனிடம் உரிமையோடு கேட்ட ரஜினிகாந்த்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார்.இதற்கு முன்னதாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. எனவே கூலி, ஜெயிலர் 2 ஆகிய இரண்டு படங்களின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், யான் படத்தின் இயக்குநருமான ரவி கே.சந்திரன் ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.'
இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக கடந்த பல வருடங்களாக திகழ்ந்துவருபவர் ரஜினிகாந்த். இடையில் அவருக்கு அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் தோல்வியாக அமைந்தன.தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. அதனையடுத்து ரஜினியின் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர் சூப்பர் ஸ்டார் நாற்காலியிலிருந்து இறங்கிவிட வேண்டியதுதான் என பலரும் கூறினார்கள். இதனால் அவரது ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் எல்லாம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் மெகா ஹிட்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார் அவர். இந்தப் படமும் தோல்வியடைந்தால் டீசன்ட்டாக ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடலாம் என்று அவரது ரசிகர்களே சன்னமாக பேச ஆரம்பித்திருந்த சமயம் அது. ஆனால் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்து அவர் நடித்த வேட்டையன் சுமாரான வரவேற்பைதான் பெற்றது.

கூலி: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகிவிட்டார். இதில் அவருடன் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயிலர் 2: கூலி படத்தில் நடித்து முடித்த கையோடு ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இப்படி இந்த வயதிலும் சுற்றி சுழன்று நடித்துக்கொண்டிருக்கும் அவரை பார்த்து பலரும் ஆச்சரியத்தின் உச்சியில் இருக்கிறார்கள். வேட்டையன் படம் அடைந்த தோல்விக்கு கண்டிப்பாக கூலியும் ஜெயிலர் 2வும் தரமான பதிலடி கொடுக்கும் என்று நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
ரவி கே.சந்திரன் பேட்டி: இந்நிலையில் இந்திய அளவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருக்கும் ரவி கே.சந்திரன் சமீபத்திய பேட்டியில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருக்கிறார். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் ரஜினியுடன் இதுவரை பணியாற்றியதில்லை. நிறைய படங்களுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். பாலிவுட்டில் ஒரு வருடத்துக்கு முன்னதாகவே அக்ரீமெண்ட் போட்டுவிடுவார்கள். அதனால் ரஜினியுடன் பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.

ரஜினி கேட்டது: லிங்கா பட சமயத்தில் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அங்கு சென்றேன். அப்போது அவரிடம் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். உடனே அவர், தெரியுமே எத்தனை படங்களுக்கு உங்களை அழைத்திருக்கிறோம் நீங்கள் வரவே இல்லையே என்று உரிமையோடு கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்திரமுகி, ரோபோ, சிவாஜி என பல படங்களுக்கு கூப்பிட்டார்கள்தான். சமீபத்தில்கூட நெல்சன் திலீப்குமாரிடம் ரஜினியை வைத்து படம் செய்யும்போது கூப்பிடு வருகிறேன் என்றேன். அதற்கு அவரோ இல்லை சார் உங்களை வைத்து என்னால் படம் எடுக்க முடியாது. நான் இஷ்டத்துக்கு எடுத்துக்கொண்டிருப்பேன் என்று சொல்லிவிட்டார். கமலும் மணிரத்னமும் இணைந்ததுபோல் ரஜினியும் மணிரத்னமும் இணைந்தால் நான் பணியாற்ற வாய்ப்புகள் இருக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications











