என்னது எனக்கு பயமா?.. சீண்டிய தவெக.. அமைதி காக்கும் விஜய்.. தரமான பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்
சென்னை: தவெகவை சேர்ந்த அதவ் அர்ஜுனா சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ரஜினிகாந்த் குறித்து கூறிய கருத்து பலத்த எதிர்வினையை சந்தித்தது. அவர் இஷ்டத்துக்கு பேசுகிறார் என கிட்டத்தட்ட அனைவருமே அவருக்கு எதிரான கருத்தை பதிவு செய்தார்கள். ரஜினிகாந்த் மட்டும் அமைதியாக இருந்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினார். இந்த சிஸ்டத்தையே மாற்றுவதற்கு விரும்பினார். ஆனால் அப்போது திமுக அவரை மிரட்டியது. அந்த சமயத்தில் அம்மிரட்டலை தாங்குவதற்கான மன வலிமை ரஜினிக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால் விஜய் அப்படி இல்லை. எதுவாக இருந்தாலும் பின்வாங்கமாட்டார்" என்று கூறியிருந்தார்.

வலுத்த கண்டனங்கள்: ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு கடும் எதிர்வினைகள் கிளம்பின. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், பிரபலங்கள் என கிட்டத்தட்ட அனைவருமே அவருக்கு எதிரான கருத்தை பதிவு செய்தார்கள். நக்கீரன் கோபால் எல்லாம் நீண்ட வீடியோவையே வெளியிட்டார். மேலும் பலர், கடந்த காலங்களில் அரசியல் களத்தில் ரஜினியின் செயல்பாடு குறித்தும், அரசியல் கட்சி தலைவர்களை அவர் டீல் செய்த விதம் குறித்தும் வரிசையாக பேசினார்கள். இதனால் தவெகவினர் செய்வதறியாது திகைத்தார்கள்.
ரஜினியின் அறிக்கை: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் தன் பங்குக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், " தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன்.
திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திருஅண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன்,, திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தமிழ்நாடு: "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த அறிக்கை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்னதாக, ஆதவ் அர்ஜுனா அப்படி பேசியதை அடுத்து ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட தவெகவுக்கு விழாது என பலரும் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் கட்சிக்குள்ளேயே அவரை பலரும் கண்டித்ததாகவும் பேச்சு ஓடுவதும் கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications















