மின்னல் முரளி டோவினோ தாமஸ் நடிக்கும் 50வது படம் ARM.. அசத்தலாக வெளியான ட்ரெய்லர்.. பட்டையை கிளப்புதே
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டோவினோ தாமஸ். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தை காட்டும் அவர் நடித்த மின்னல் முரளி, 2018, அன்வெஷிப்பின் கண்டெடுத்தும் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. கடைசியாக அவரது நடிப்பில் நடிகர் படம் வெளியானது. இந்நிலையில் அவரது 50ஆவது படமான Ajayante Randam Moshanam படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
கேரளாவில் ஃபேமஸ் நடிகரான டோவினோ தாமஸ் மலையாளம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார். முக்கியமாக அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக உள்ளனர். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெவ்வெறு கதைக்களத்தை கொண்டிருக்கும். அவர் நடித்த மின்னல் முரளி குழந்தைகளிடத்தில் நல்ல ரீச்சை கொடுத்தது. 2018 படம் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அவர் இப்போது Ajayante Randam Moshanam படத்தில் நடித்திருக்கிறார். இது அவருக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

3டியில் உருவாகும் படம்: ARM படம் பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் தயாராகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கியிருக்கிறார். சுஜித் நம்பியார் திரைக்கதை எழுத, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க 3Dயில் தயாராகி, மலையாள சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படமாக மாறியிருக்கிறது.
வெளியான ட்ரெய்லர்: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. பூமியை எரியும் சிறுகோள் தாக்கி பெரிய வெடிப்பை ஏற்படுத்தும் காட்சியுடன் ட்ரெய்லர் தொடங்கி ஒரு வயதான பெண்மணி மணியனின் கதையை சொல்கிறார். அதன்பிறகு படத்தில் உள்ள பல சுவாரஸ்ய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ட்ரெய்லரை பார்க்கையில் இந்தப் படமானது 1900, 1950 மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் வடக்கு கேரளாவில் நடைபெறுகிறது என்பது தெரிகிறது. மணியன், குஞ்சிக்கெழு மற்றும் அஜயன் என்ற மூன்று கதாபாத்திரங்களை டோவினோ தாமஸ் ஏற்று நடித்திருக்கிறார்.
டோவினோவின் உழைப்பு: டோவினோ தாமஸ் தனது 50வது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. ஜோமோன் டி. ஜானின் அருமையான ஒளிப்பதிவு, "கந்தாரா" புகழ் விக்ரம் மூர் மற்றும் பீனிக்ஸ் பிரபு ஆகியோரின் சண்டைக்காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நட்சத்திரங்கள்: இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, பிரமோத் ஷெட்டி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் "ARM" படம் செப்டம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











