சண்டைக் காட்சியில் ஏற்பட்ட விபத்து.. சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் டோவினோ தாமஸ் டிஸ்சார்ஜ்!
கொச்சி: சண்டைக் காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் டோவினோ தாமஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில், தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
அதற்கு முன், பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கி இருந்த அபியும் அனுவும் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

என்னு நின்டே மொய்தீன்
மலையாளத்தில் கூதரா, என்னு நின்டே மொய்தீன், ஆமி, நாம், லூசிஃபர், வைரஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது 'மின்னல் முரளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது. பசில் ஜோசப் இயக்கும் இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அட்வெஞ்சர்ஸ்
ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் விளாட் ரிம்பர்க் இதில் பணியாற்றுகிறார். இதனிடையே அவர் தற்போது கள என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ரோகித் பி.எஸ் இயக்கி வருகிறார். இவர், ஏற்கனவே அட்வெஞ்சர்ஸ் ஆஃப் ஓமனக்குட்டன் என்ற படத்தை இயக்கியவர்.

அடி வயிற்றில் காயம்
இந்தப் படத்தின் சண்டைக் காட்சி ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் நடந்து வந்தது. அப்போது இதில் எதிர்பாராத விதமாக டோவினோ தாமஸின் அடி வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ரத்தக்கட்டு
அங்கு அவர் ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். அவர் வயிற்றுக்குள் குடலைச் சுற்றியுள்ள கொழுப்புச்சத்தில் ரத்தக்கட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஓரளவுக்கு குணமானதை அடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இப்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











