Mankatha 2 - என்னது மங்காத்தா 2 வராததற்கு அஜித்தான் காரணமா?.. வைபவ் சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இப்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை அஜித் ரசிகர்களிடம் இருக்கிறது. இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து மெகா ஹிட்டான மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் ரசிகர்கள் அடிக்கடி பேசிவந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். அதுமட்டுமின்றி படத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் படு ஜாலியாக கொண்டுபோவதில் வல்லவர் என்ற பெயரையும் அடுத்தடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா உள்ளிட்ட படங்கள் கோலிவுட் ரசிகர்களுக்கு உணர்த்தின.

முதல் மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்க கமிட்டானார் வெங்கட் பிரபு. அஜித்தின் படத்தை அதுவும் 50ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா என்றே பலரும் ஆச்சரியத்துடன் அந்த சமயத்தில் கேள்வி எழுப்பி; படம் ஹிட்டாகிவிடுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பினர். ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி படமானது மெகா ஹிட்டானது. குறிப்பாக கதையில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் தியேட்டரில் அனைவரையுமே வாய் பிளக்க வைத்தது.
சறுக்கிய வெங்கட் பிரபு: மங்காத்தா படம் மெகா ஹிட்டான பிறகு சென்சேஷனல் இயக்குநராக மாறினார் வெங்கட் பிரபு. ஆனால் அதற்கடுத்து அவர் இயக்கிய படங்கள் தோல்வியையே சந்தித்தன. இப்படிப்பட்ட சூழலில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி தனது ஸ்க்ரீன்ப்ளேவில் மேஜிக் செய்ய படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக மீண்டும் முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்தார் வெங்கட் பிரபு.
GOAT வெங்கட் பிரபு: அவரது இயக்கத்தில் கடைசியாக கஸ்டடி படம் ரிலீஸானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கு வெங்கட் பிரபு கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்
மங்காத்தா 2: இதற்கிடையே மங்காத்தா படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான லீடை கொடுத்திருப்பார் வெங்கட் பிரபு. இதன் காரணமாக மங்காத்தா 2 படம் எப்போது தயாராகும் என தொடர் கேள்விகள் வெங்கட் பிரபுவை துரத்திக்கொண்டிருந்தன. அவரும் சில பேட்டிகளில் அஜித் சார் ஓகே சொன்னார்னா மங்காத்தா 2வை எடுத்துவிடுவேன் என கூறிவந்தார். அதேசமயம் வெங்கட் பிரபு மீது அஜித்துக்கு வருத்தம் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மங்காத்தா 2 வரவில்லை என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது.
வைபவ் பேட்டி: இந்நிலையில் GOAT படத்தில் நடித்துவரும் வைபவ் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அவ்வப்போது வெங்கட் பிரபுவிடம் கேட்பதுண்டு. ஆனால் அஜித் தரப்பிலிருந்து வெங்கட் பிரபுவை இதுவரை அழைக்கவில்லை. அதனால் அமைதியாக இருக்கிறார் வெங்கட் பிரபு. இருந்தாலும் நான் அவரிடம் அடிக்கடி மங்காத்தா 2 பற்றி பேசியிருக்கிறேன்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ மங்காத்தா 2 வராததற்கு அஜித்தான் காரணமா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











