குடும்பத்தை பற்றி தவறான பேச்சு.. மன உளைச்சலில் அருண் விஜய்.. நடந்தது என்ன?
சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜய், தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் தவறான தகவலை பரப்பிய பிரபல யூடியூப் சேனல் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவரான விஜயகுமார், ஆரம்பத்தில், கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வந்தார். பின், குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமா என 400 படங்களுக்கு மேல் படங்களில் நடித்துள்ளார். இவர், 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

நடிகர் அருண் விஜய்: பின்னர், நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை 1976ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் அருண் விஜய் தந்தையை போல சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து வந்த இவர், தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
தியா திலன் திருமணம்: கடந்த மாதம் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கும் திலன் என்பவருக்கும் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜயகுமாரின் மகள்கள் கவிதா, ப்ரீத்தா, மகன் அருண் விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு, ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த கொண்டாட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரவியது.
தவறான தகவல்: இந்த நிலையில், தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் தவறான தகவலை பரப்பிய யூடியூப் சேனல் மீது அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 'தன்னை பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான கருத்துக்களை தனியார் யூடியூப் சேனல் ஒன்று வீடியோ மூலம் பதிவு செய்துள்ளது என்றும் இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். தவறான தகவல்களை பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்’. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











