போடு வெடிய.. சிம்பு - வெற்றிமாறன் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போ ஸ்டார்ட் தெரியுமா?
சென்னை: சிம்புவின் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் படம் வெளியானது. முதன்முறையாக கமலுடன் அவர் இணைந்திருந்ததால் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருக்கிறார். அதேசமயம் தேசிங்குடனான படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
எஸ்டிஆர், Atman என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிம்பு. இடையில் அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் சினிமாவில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். அதனையடுத்து உடல் எடையை குறைத்து, எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி மீண்டும் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக நடித்த மாநாடு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பையும், பத்து தல படம் சுமாரான வரவேற்பையும் பெற்றது.
கமலுடன் முதன்முறையாக: கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்தார். பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது. ஆனால் படுதோல்வியைத்தான் சந்தித்தது. அதேசமயம் படத்தில் சிம்புவின் நடிப்பு செம அட்டகாசமாக இருந்தது என்றும்; இதே நடிப்பை வேறு ஒரு நல்ல கதையில் போட்டிருந்தால் ஹிட்டும், பெயரும் ஒருசேர கிடைத்திருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்: இதனையடுத்து அவர் பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதன் பூஜை சமீபத்தில்தான் நடந்தது. அவருக்கு ஜோடியாக டிராகன் புகழ் கயாடு லோஹர் நடிக்கிறார். மேலும் சந்தானமும் நீண்ட காலத்துக்கு பிறகு காமெடி ரோலை ஏற்றிருக்கிறார். சந்தானத்தை சிம்புதான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். எனவே சிம்புவுக்காக தனது ஹீரோ பயணத்திலிருந்து கொஞ்சம் விலகி இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வின்டேஜ் சிம்பு: இதற்கிடையே பெரியசாமி இயக்கத்தில் ஒரு படமும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படமும் கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் தேசிங்குவுடனான படத்தை முதலில் கமல்தான் தயாரிக்கவிருந்தார். சில காரணங்களால் அவர் விலகியதைத் தொடர்ந்து சிம்புவே அந்தப் படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் அந்தப் படம் உருவாகவிருப்பதாகவும் கோலிவுட் முழுக்க பேச்சு ஓடியது.
வெற்றிமாறனுடன் சிம்பு?: ஆனால் சிம்பு - தேசிங்கு பெரியசாமி இணையும் படத்தை ட்ராப் செய்துவிட்டார்கள் என்று கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதேசமயம் வெற்றிமாறனுடன் சிம்பு இணைந்திருப்பதாகவும் பேசப்படுகிறது. சூர்யாவை வைட்து வெற்றிமாறன் இயக்கவிருந்த வாடிவாசல் படம் கைவிடப்பட்டதால்; சமீபத்தில் சிம்புவை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கியதாகவும் கோலிவுட் முழுக்க பரபரக்கிறது.
எப்போது ஷூட்டிங்?: இந்தப் படமானது வடசென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கிறது என்றும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இதனால் எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். தனுஷை வைத்து வடசென்னை என்ற க்ளாசிக் படத்தை கொடுத்தது போல் சிம்புவை வைத்தும் வெற்றி கொடுப்பார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜூலை 16ஆம் தேதி எண்ணூரில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











