காலமானார்னு ஹாஷ்டேக் போடலாமா?.. இதற்கு கண்டன அறிக்கை வராதா?.. எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள்!
சென்னை: கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் கோஷம் போட்ட உடனே இதெல்லாம் தப்பு என்று சுட்டிக் காட்டி அப்படி அழைக்க வேண்டாம் என கண்டன அறிக்கையை அஜித் வெளியிட்டு இருந்தார். ஆனால், சோஷியல் மீடியாவில் இன்று காலை முதலே படுமோசமாக விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் தெறிக்கவிட்டு வரும் டிரெண்டிங்கை பார்க்கவே கேவலமாக உள்ளது.
தமிழ் சினிமாவில் இன்னும் ஒரே ஒரு படம் தான் விஜய்க்கு உள்ளது என அவரே கூறியுள்ளார். தளபதி 69 படத்துக்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். தவெக முதல் மாநாட்டுக்கு அஜித் ரசிகர்கள் பலர் அண்ணன் தம்பி உறவுடன் பேனர்களை வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதையெல்லாம் பார்க்க எவ்வளவு நன்றாக இருந்தது. ஆனால், விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில், ”காலமானார் அஜித்”, “காலமானார் விஜய்” என குரோதத்தின் எல்லைக்கே சென்று தற்போது ரசிகர்கள் செய்து வரும் கன்றாவித்தனத்தை கண்டித்து அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் கண்டன அறிக்கைகளை விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பொங்கலுக்கு அஜித் படம்: இந்த ஆண்டு விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் தான் பெருவாரியான தியேட்டர்களில் அதிக வசூல் ஈட்டி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. ரஜினிகாந்தின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா, கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வசூலில் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. சிவகார்த்திகேயனின் அமரன் படம் சில இடங்களில் விஜய்யின் கோட் படத்தையே ஓரங்கட்டி விட்டது. அஜித் படம் ஒன்று கூட இந்த ஆண்டு வரவில்லையே என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில், 2025 பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகிறது என்றும் அஜித் டப்பிங்கையே முடித்துக் கொடுத்துவிட்டார் என்றும் அறிவிப்புகள் வெளியாக அஜித் டிரெண்டாகி வருகிறார்.

கேவலமான ஹாஷ்டேக்: நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் காலமாகி விட்டதாக ரசிகர்கள் ரொம்ப கேவலமான ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருவது எந்தளவுக்கு மோசமான ரசிகர்களை இந்த இரு நடிகர்களும் உருவாக்கி வைத்திருக்கின்றனர் பாருங்கள் என்று சமூக ஆர்வலர்கள் நடிகர்கள் மீதே விமர்சனங்களை அடுக்கும் விதத்தில் இழிவான செயலை இரு தரப்பினரும் கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இன்றி செய்து வருகின்றனர். தங்களுக்கு பிடித்த ஹீரோக்களே இதை கொஞ்சம் கூட விரும்பமாட்டார்கள் என்று தெரிந்து இப்படி செய்யலாமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











