ஹீரோவாக இருபது ஆண்டுகள்... விஜய்யின் சறுக்கலும் சாதனைகளும்!
சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ஒரு ஹீரோவாக அறிமுகமானார் ஜோசப் விஜய் எனும் விஜய்.
அன்று அவரது முகவரி எஸ்ஏ சந்திரசேகரன், ஷோபா சந்திரசேகரன் மட்டுமே. அவரை ஒரு ஹீரோவாக புரமோட் பண்ண ஏஸ்ஏசியும், ஷோபாவும் செய்த முயற்சிகள், ஏதோ நேற்றுதான் நடந்தவை போலத் தெரிகின்றன.

விஜயகாந்த் செய்த உதவி
நாளைய தீர்ப்பில் விஜய் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் ரஜினி அவரை வரவழைத்து வாழ்த்தினார். அப்போது விஜயகாந்த் ஓரளவு நல்ல ஃபார்மில்தான் இருந்தார். விஜய்க்கு ஆபத்பாந்தவனாக மாறி, செந்தூரபாண்டியில் கெஸ்ட் ரோல் செய்தார். பெரிய வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் விஜய்யை கொண்டு சேர்த்தது அந்தப் படம். தன்னை வெற்றிகரமான ஹீரோவாக்கிய எஸ் ஏ சந்திரசேகரனுக்கு விஜயகாந்த் செய்த நன்றிக்கடனாக அது அமைந்தது.

இந்த மூஞ்சியையெல்லாம்...
அடுத்து எஸ்ஏசி விஜய்யை வைத்து எடுத்த படம் ரசிகன். இந்தப் படத்தில் கவுண்டமணியை துணைக்கு வைத்துக் கொண்டனர்.
இந்தப் படம் வெளியான தருணம். ஒரு முன்னணிப் பத்திரிகை அன்றைக்கு விஜய்யை மிகக் கேவலமாக எழுதியது. இந்த மூஞ்சியை காசு கொடுத்த பார்க்க வேண்டுமா என்றே குறிப்பிட்டுவிட்டது. அன்றைக்கு அந்தப் பத்திரிகையை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார் எஸ்ஏசி. ஆனால் இன்று அதே பத்திரிகை விஜய்யை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. விஜய்யும் தன்னை புகழ்ந்த பத்திரிகைகளை வாசலுக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு, கேவலமாக எழுதிய பத்திரிகைக்கு முதலிடம் கொடுக்கிறார். சினிமா சார் சினிமா...!!

ஒன்ஸ்மோர்...
ஒன்ஸ்மோர் படம் வரை, விஜய்யின் கேரியர்கிராப் ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. இந்தப் படத்தில் சிவாஜி, சரோஜா தேவி, மணிவண்ணன் என பெரும்பலம் அவருக்கு. படமும் ஓரளவு வென்றது.

பூவே உனக்காக
விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விஜய்க்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்தது. நல்ல பாடல்கள் (காப்பிதான் என்றாலும்...), சிறந்த நடிப்பு, நாடகத்தனமாக இருந்தாலும், பார்வையாளர்களை ஈர்த்துக் கொண்ட கதை என ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக பூவே உனக்காக அமைந்தது.

காதலுக்கு மரியாதை...
விஜய் என்ற இளைஞனை, பெரிய நடிகனாக நிலை நிறுத்தியது இந்தப் படம். பாசில் இயக்கியிருந்தார். இளையராஜாவின் அற்புதமான இசை அன்றைக்கு திரையுலகையே கலக்கியது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் வெற்றி தோல்விகளைத் தாண்டிய நட்சத்திர நாயகனாக மாறினார் விஜய்.

நடிப்பு ப்ளஸ் நடனம்...
காதலுக்கு மரியாதை படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார் விஜய். நினைத்தேன் வந்தாய் படத்தில் ஒரு ஜாலியான விடலைப் பையனாக வந்தவர், அதற்கடுத்து ப்ரியமுடன் படத்தில் அப்படியே 360 டிகிரி மாற்றத்தைக் காட்டினார். அந்தப் படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பு, விஜய் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

துள்ளாத மனமும் துள்ளும்
தொடர்ந்து விஜய் - சிம்ரன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற துள்ளாத மனமும் துள்ளும் விஜய்யின் கேரியரில் ஒரு முக்கியமான படம்.
அதற்கடுத்து வந்த என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரக் கண்ணா படங்கள் சுமாராகப் போயின, கண்ணுக்குள் நிலவு மீண்டும் அவரது நடிப்பைப் பறை சாற்றியது.

குஷி, ப்ரண்ட்ஸ்
நான்கு படங்களின் சறுக்கலை அடுத்து வந்த குஷி, ப்ரியமானவளே மற்றும் ப்ரண்ட்ஸ் படங்கள் நிமிர்த்தின. வசீகரா படம் இன்றும் அனைத்துத் தரப்பினரும் விரும்பிப் பார்க்கும் படமாக உள்ளது.

ஆக்ஷன் அதிரடி...
கொஞ்சம் சாஃப்ட் லவ், ஆக்ஷன் என்றிருந்த விஜய்க்கு திருப்புமுனை தந்த படம் திருமலை. இந்தப் படம் மூலம் முழுமையாக ஆக்ஷனுக்கு மாறினார் விஜய்.

கில்லி...
அவரை மீண்டும் மென்மையான படங்களுக்கு திரும்பவே முடியாதபடி செய்தது தரணி இயக்கிய கில்லி. சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அந்த வெற்றியோடு கூடவே பயணித்தது விஜய்யின் அரசியல்!
மன்றங்களை அதிகரித்தார். நலத்திட்ட உதவிகள் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதியாகவும் பரிமாணம் காட்டினார்.
திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என ஒருபக்கம் வெற்றிகளும், சச்சின், ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தோல்விகளும் தொடர்ந்தன. இந்த தோல்வியின் வீச்சு, விஜய்க்கு ரெட் கார்டு போடும் அளவுக்குப் போனது.

காவலன்...
அதனை சற்றே தடுத்து நிறுத்தியது காவலன். தொடர்ந்து வந்த வேலாயுதம், நண்பன் போன்ற படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் போனதால் தப்பித்தார் விஜய். இதையெல்லாம் எந்திரன் வசூலோடு ஒப்பிட்டு அவரும் அவரது அடிப்பொடிகளும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தது தனிக் கதை.

விமர்சனங்கள் இருந்தாலும்...
விஜய்யின் நடிப்பு, அவரது படங்கள், அரசியல் ஸ்டன்ட்டுகள் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவரை இந்த 20 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலைக்க வைத்திருப்பது, அவரது அபார தன்னம்பிக்கை... எதையெல்லாம் விமர்சகர்களும் மீடியாக்களும் மைனஸ் ஆக சொன்னார்களோ அதையே ப்ளஸ்ஸாக மாற்றிக் காட்டிய விதம்!


Click it and Unblock the Notifications