இன்று கடைசி நாள்.. விஜய்யை நினைத்து உருகும் சிபிராஜ்.. சத்யராஜ் பார்த்தால் கடுப்பு ஆவாரோ?
சென்னை: அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பரப்புரையில் எல்லாம் அவருக்கு ஆதரவு இருந்தாலும்; சத்யராஜ் உள்ளிட்டோர் எல்லாம் அவரை வெளுத்து வாங்குகிறார்கள். விஜய்யை சத்யராஜ் விமர்சித்தாலும் அவரது மகன் சிபி ராஜ் தீவிர தவெக தொண்டராக இருக்கிறார். ஒரே வீட்டுக்குள் அப்பா, மகன் இப்படி முரண்பட்டிருந்தாலும் அதனை அவர்கள் ஆரோக்கியமாகவே கொண்டு செல்கிறார்கள். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிபி உருக்கமாக விஜய்யை பற்றி எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "விஜய் அண்ணாவுக்கு. பொள்ளாஅச்சி சக்தி ஹோட்டலில் 1993ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி எனது அப்பாவுடைய பிறந்தநாளுக்கு எஸ்.ஏ.சி சார், விஜயகாந்த் அங்கிளுடன் நீங்கள் வந்திருந்தபோதுதான் நான் முதல்முதலாக உங்களை சந்தித்தேன். அப்போது அந்த எளிமையான இளைஞன் என்னையும் சேர்த்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று எதிர்காலத்தில் பெரிய சக்தியாக மாறுவார் என்று எனக்கு தெரியாது.

உங்களுடன் நிற்பேன்: நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தாலும், ஒரு ரசிகராகவும், நடிகராகவும், சகோதரராகவும், நண்பராகவும் நான் உங்கள் புதிய பாதையை மதிக்கிறேன்; எப்போதும் உங்களுடன் நின்றுகொண்டே இருப்பேன். பல ஆண்டுகளாக நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். என் நெருங்கிய நட்புகளில் பல, உங்கள் மீது உள்ள காதலால் மட்டுமே உருவானவை.
எனது முதல் டேட்: என் காதலியாக இருந்து மனைவியாக மாறிய ரேவதியுடன் நான் சென்ற முதல் டேட், 20-11-2000 அன்று ஆல்பர்ட் திரையரங்கில் பிரியமானவளே படம் பார்த்ததுதான். உங்களை விமர்சித்தவர்களுக்கு எதிராக நான் நடத்திய ஆரோக்கியமான விவாதங்களும் எனக்கு நினைவில் நிற்கும். உங்கள் வெற்றிகளை, என் வெற்றிகளைப் போலவே நான் கொண்டாடினேன். என் திருமணத்துக்குப் பிறகு உங்கள் வீட்டில் டின்னருக்கு வந்த தருணங்கள், என் லீ படத்தின் விழாவிற்கு நீங்கள் வந்தது, என் படங்களுக்கு நீங்கள் ஃபோன் செய்து வாழ்த்து கூறிய தருணங்கள், நான் அழைத்தாலோ மெசேஜ் அனுப்பினாலோ உடனடியாக பதில் அளித்தது - இவை எல்லாம் என் வாழ்க்கையின் மதிப்புமிக்க நினைவுகள்.
நீங்கள்தான் ஊக்கம்: நான் சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், இந்த துறையில் நுழைய எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தவர் நீங்கள் தான். உங்கள் படங்கள் பொழுதுபோக்காக மட்டுமே தோன்றினாலும், உண்மையான காதல், நட்பு, கடின உழைப்பு போன்ற வாழ்க்கை மதிப்புகளை எங்களுக்கு கற்றுத்தந்தன. உங்கள் "குட்டி ஸ்டோரிகள்" பல சுய முன்னேற்ற புத்தகங்களை விட வாழ்க்கையைப் பற்றி ஆழமான புரிதலை கொடுத்தன. "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!" இது ஒரு டயலாக் மட்டும் அல்ல... நீங்கள் வாழும் வாழ்க்கை தத்துவம்!
வென்று வா தலைவா: கடந்த 30 ஆண்டுகளாக எங்களை மகிழ்வித்து, ஊக்கமளித்ததற்கு நன்றி! நீங்கள் கொடுத்த சினிமா நினைவுகளை எப்போதும் நாங்கள் போற்றிக்கொண்டே இருப்போம். வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்றுடன் தேர்தல் பரப்புரை முடியவிருக்கும் நிலையில் விஜய்க்கு ஆதரவாக சிபி போட்டிருக்கும் இந்த போஸ்ட் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
