விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாராமே!
சென்னை: ஒரு பிரபல வாரப் பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தி, விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
தமிழ்ப் பத்திரிகையுலகில் ரஜினி, சூப்பர் ஸ்டார் இந்த இரண்டு வார்த்தைகளும் எவர்கிரீன். எப்போதெல்லாம் சுவாரஸ்யமும் வியாபாரமும் குறைகிறதோ, அப்போதெல்லாம் உடனடியாக கைகொடுக்கும் மாமருந்து இந்த இரு வார்த்தைகளும்.

இருபது ஆண்டுகளாக...
கரு பழனியப்பன் தான் இயக்கிய சதுரங்கம் படத்தில் இதைச் சித்தரிக்கும் வகையில் ஒரு காட்சி வைத்திருப்பார். ஒரு பிரபல வாரப் பத்திரிகை, 'இந்த வாரம் பரபரப்பா மேட்டர் ஒண்ணுமில்லையே.. என்ன பண்ணலாம்?' என்று ஆலோசனை கேட்க, 'அரசியலில் ரஜினி?' அப்படின்னு போடுங்க... - என்பார்.
அதுதான் தொன்னூறுகள் தொடங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது தமிழ்ப் பத்திரிகையுலகில்.
ஆண்டுதோறும், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று - நடிகர்கள் அலசுகிறார்களோ இல்லையோ - பத்திரிகைகள் அலசோ அலசென்று அலசுவார்கள்.

அஜீத்தை வைத்து
முன்பு அஜீத்தை மையமாக வைத்து இந்த அலசல்களை நடத்தினர். அவர் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு, ஆளை விடுங்க சாமி, நான் இதுக்குள்ளயே வரல என்று தன் வேலையை மட்டும் பார்க்க ஆரம்பிக்க, இன்று அவர் ரேஞ்சே வேறு என்று தனி மகுடம் சூடிக் கொண்டார்.

லிட்டில், யங்...
லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்களுக்கு அடுத்த படம் எப்போது வரும் என்றே தெரியாத நிலை.

விஜய்தானாமே...
இந்த நிலையில்தான் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் சில வாரங்களாக ஒரு வாரப் பத்திரிகை பெரிய அலசல் வேலையில் இறங்கியது. ஏதோ தமிழ்நாட்டு தேர்தல் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி, அதில் விஜய்க்குதான் முதலிடம் அதனால் அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் என கட்டுரை வெளியிட்டுள்ளது.
விஜய்க்கு அடுத்துதான் அஜீத், சூர்யா என்று பட்டியல் போட்டுள்ளார்கள்.

ரஜினி மட்டுமே
சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயர், தமிழகத்தில் இன்றும் பவர்புல் பெயராக இருக்கும் எம்ஜிஆருக்கே கூட பயன்படுத்தப்படவில்லை. அவருக்கு முன், திரையுலகின் பெரும் சக்தியாகத் திகழ்ந்த பாகவதருக்கும் கூட இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதில்லை. இந்திய அளவில் ராஜேஷ் கன்னா, அமிதாப் என யாருக்கும் இந்தப் பட்டம் சூட்டப்பட்டதில்லை. அது ரஜினிகாந்த் என்ற ஒருவருக்கு மட்டுமே எழுபதுகளின் இறுதியில் சூட்டப்பட்டது. இன்றுவரை அவருக்கு மட்டுமே உரித்தான பட்டப் பெயராகத் திகழ்கிறது. ஒப்பீட்டளவில் அந்தப் பட்டப்பெயரே, தமிழ் சினிமாவின் உச்சமாகத் திகழ்வதால், அதை வைத்தே யார் முன்னணி நடிகர் என்ற கணிப்பை நடத்துகிறார்கள்!


Click it and Unblock the Notifications











