விஜய் சேதுபதி மகனை சந்தித்த விஜய்.. ஃபீனிக்ஸ் சூர்யா ரொம்ப எமோஷனல் ஆகிட்டாரே
சென்னை: மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. இவரது மகனான சூர்யா ஏற்கனவே நானும் ரௌடிதான், சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் ஃபீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். படமானது இன்று வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் சூர்யாவை நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஃபீனிக்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் தேவதர்ஷினி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தந்தை போலவே மகனும் பெரிய நடிகராக மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையினரிடம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும், செலிபிரிட்டிகளும் சூர்யாவின் நடிப்பை பாராட்டிவருகிறார்கள்.
என்ன கதை?: ஒரு கொலை செய்வதால் சிறைக்கு செல்லும் ஹீரோ அங்கு என்னென்ன சம்பவங்களை சந்திக்கிறார்; எதற்காக அந்த கொலையை அவர் செய்தார் என்பதே படத்தின் அவுட் லைன். படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியிருக்கின்றன. அதற்காக சூர்யா கடுமையாக உழைத்து தயாராகியிருக்கிறார். முதல் படம் மாதிரியே தெரியவில்லை என்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

நெகட்டிவ்வும் உண்டு: அதேசமயம் படம் சம்பந்தபட்ட விழாவில் சூர்யா நடந்துகொண்ட விதத்தை விமர்சிக்கவும் தவறவில்லை ரசிகர்கள். அதுமட்டுமின்றி அவரை ட்ரோல் செய்த வீடியோக்களை நீக்கும்படி சூர்யா தரப்பிலிருந்து மிரட்டல் வந்ததாகவும் ஒரு தகவல் ஓடியது. அதுகுறித்து பேசியிருந்த அவரது தந்தை விஜய் சேதுபதி, "எங்கள் தரப்பிலிருந்து மிரட்டல் வந்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். தம்பிமாருங்க தெரியாமல் செய்திருப்பார்க்ள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
உருக்கமான சூர்யா: இதற்கு முன்னதாக பட பூஜையின்போது, 'அப்பா வேற நான் வேற' என்று சூர்யா பேசியதையும் கடுமையாக ட்ரோல் செய்திருந்தார்கள் ரசிகர்கள். அதுகுறித்து அவர் உருக்கமாகவும் பேசியிருந்தார். ரிலீஸுக்கு முன்னதாகவே இப்படி நெகட்டிவ்விட்டி அவரை சுற்றியதால் படத்தின் ரிசல்ட் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் அந்தத் தரப்புக்கு இருக்கிறது. ஆனால் படம் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்ற கருத்துக்கள் வந்திருப்பதால் நிம்மதியடைந்திருக்கிறார்கள் அவர்கள். நிச்சயம் சூர்யாவுக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாகவும் ஆரூடம் கூறப்படுகிறது.
சூர்யாவை சந்தித்த விஜய்: இந்நிலையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று ஃபீனிக்ஸ் ஹீரோ சூர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து சூர்யா சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "விஜய் சாருக்கு நன்றி. அன்பான வார்த்தைகள், அரவணைப்பு. நான் உங்களை வியந்து பார்த்திருக்கிறேன். எனது பயணத்தில் உங்களது ஆதரவை நான் எப்போதுமே மறக்கமாட்டேன் தளபதி' என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்யின் ரசிகன் சூர்யா: முன்னதாக சில நாட்களுக்கு முன்பு சூர்யா அளித்த பேட்டி ஒன்றில், "நான் விஜய் மற்றும் சிம்புவின் தீவிர ரசிகன். அவர்கள் நடந்து வந்தாலே ஒரு மேஜிக் நிகழும். ஃபீனிக்ஸ் இயக்குநர் அனல் அரசுதான் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர். அந்தப் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்பது கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறது" என பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











