காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த சிஎம் விஜய்.. இளைஞர்களுடன் மாஸ்டர் போஸ்.. வேறலெவல் சம்பவம்!
சென்னை: நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் தேர்தலிலேயே திமுகவையே சாய்த்து வெற்றிப் பெற்று மாறியுள்ள விஜய் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருவதற்காக கோட் சூட் உடையில் வீட்டில் இருந்து கிளம்பும் போது, அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என நீலாங்கரையில் அவர் வீட்டின் அருகே காத்திருந்த மக்களுக்கும் ரசிகர்களுக்கும் செம சர்ப்ரைஸ் கிடைத்தது.
காரில் ஏறி அப்படியே தலைமைச் செயலகத்துக்கு சென்று விடாமல் காரில் இருந்து இறங்கி தன்னைக் காண காத்திருந்த மக்களை சந்தித்து விட்டுச் சென்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மேலும், மாஸ்டர் படத்தில் கைகளை மடக்கி விஜய் விஜய் சேதுபதியுடன் மோதும் போஸ் ரொம்பவே ஃபேமஸ் ஆன நிலையில், அதே போஸை சில இளைஞர்கள் செய்ய முதலமைச்சர் விஜய்யும் அவர்களுடன் விளையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற காட்சி வைரலாகி வருகிறது.
விஜய் பிறந்தநாள்: வரும் ஜூன் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி இயக்குநர் சந்திரசேகர் மற்றும் பாடகி சோபாவுக்கு மகனாக பிறந்தார். விஜய்யின் தங்கை வித்யா உயிரிழந்த நிலையில், விஜய் அண்ணா என அழைக்கும் பெண்களை தனது தங்கைகளாகவே பாவித்து வருகிறார். விஜய் முதலமைச்சராக முக்கிய காரணமே ஏகப்பட்ட இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் வாக்குகள் மொத்தமாக விஜய்க்கு விழுந்தது தான் என்கின்றனர். இந்த ஆண்டு 52வது பிறந்தநாளை விஜய் கொண்டாட உள்ள நிலையில், மக்களுக்கு ஏதாவது இனிப்பான செய்தி வரும் என்றும் ரசிகர்களுக்கு ஜன நாயகன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களை சந்தித்த மாஸ்டர் விஜய்: முதலமைச்சராக மாறினாலும் இன்னமும் எப்போதும் போல அதே அன்புடனும் எளிமையுடனும் மக்களை சந்தித்து வருகிறார் விஜய். இன்று நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு விஜய் புறப்பட்ட நிலையில், அவரை காண குவிந்து இருந்த மக்களை சந்தித்து விட்டு மாஸ்டர் போஸை சில இளைஞர்களுடன் செய்து விளையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பிய வீடியோவை விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications