ஜனநாயகன் படத்தை பார்த்த தணிக்கை குழு.. ஸ்ட்ரிக்ட்டாக ஒரு விஷயத்தை செஞ்சுட்டாங்களாம்.. என்ன தெரியுமா?
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டதால் படமானது ரிலீஸாகவில்லை. நீதிமன்றத்திலும் தங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்காத காரணத்தால் வழக்கு வாபஸ் பெறப்பட்டு; மறு தணிக்கை குழுவின் பார்வைக்கு படமானது அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தை பார்த்த அவர்கள் ஒரு விஷயத்தை ஸ்ட்ரிக்ட்டாக செய்திருக்கிறார்களாம்.
அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்க்கு ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனது கடைசி படத்தை தரமாக கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் இப்படத்தில் கூட்டணி அமைத்தார். இதில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க; கேவிஎன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

படத்துக்கு எழுந்த சிக்கல்: ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுப்பதற்கு மறுத்துவிட்டார்கள். இதன் காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனையடுத்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கெல்லாம் இந்த விஷயம் சென்றது. ஆனாலும் அங்கே எந்த விஷயமும் படக்குழுவுக்கு சாதகமாக நடக்கவில்லை. இதனால் திருவிழா போல் பட ரிலீஸை கொண்டாடுவதற்கு தயாரான விஜய்யின் ரசிகர்கள் செய்வதறியாது கலங்கி போய் நின்றார்கள். தங்களது அதிருப்தியை திமுக பக்கமும் திருப்பினார்கள்.
வழக்கு வாபஸ்: நீதிமன்றத்தில் இனிமேல் நமக்கு ஒன்றும் வேலை ஆகாது என்பதை புரிந்துகொண்ட கேவிஎன் நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்று; படத்தை மறு தணிக்கை குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்தது. முதலில் மார்ச் ஒன்பதாம் தேதி படத்தை அவர்கள் பார்ப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. இதனால் மேற்கொண்டு அப்செட் ஆனார்கள் ரசிகர்கள். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் மறு தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டார்கள் என்பது கொஞ்சம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான்.
சென்சார் குழு போட்ட மியூட்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்தில் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகியோர் பத்திரிகையாளர்களாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்களாம். அவர்கள் விஜய்யிடம் அரசியல் குறித்து கேள்வி எழுப்புவது போன்றும்; அதற்கு விஜய் பதிலளிப்பது போன்றும் இருக்கும் காட்சியில்; விஜய் பேசுவதற்கு மியூட் போட்டுவிட்டதாக கூறுகிறார்கள். படக்குழு எவ்வளவோ முயன்றும் தங்களது ஆர்டரில் ஸ்ட்ரிக்ட்டாக இருந்தார்களாம் சென்சார் குழுவினர்.
தேர்தல் ஆணையரின் விளக்கம்: வசனத்துக்கு மியூட் போட்டாலும் பரவாயில்லை தயவு செய்து படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்பது ரசிகர்களின் கோரிக்கை. முன்னதாக, விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால்; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கும் விஜய்யின் படத்தை; தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது ரிலீஸ் செய்யலாமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், "இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுவிட்டு பதிலளிக்கிறேன்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படமானது மே மாதம் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications















