விஜய்யை வீழ்த்த மு.க.ஸ்டாலினின் பிளான்?.. ரஜினி, கமல் துணைக்கு.. ஆஹா இது வேற மாதிரி இருக்கே பாஸ்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்து கட்சிகளும் பரபரத்து இருக்கின்றன. முக்கியமாக அனைவரது கவனமும் விஜய் ஆரம்பித்திருக்கும் தவெக மீது விழுந்திருக்கிறது. அவர் இந்தத் தேர்தலில் பெரம்பூரிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் களம் காண்கிறார். அதேசமயம் இரண்டு தொகுதிகளில் அவர் நிற்பது அவரது தோல்வி பயத்தை காட்டுவதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.
சினிமாவில் பீக்கில் இருக்கும் விஜய்; அந்தத் துறையை விட்டுவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்ததிலிருந்து இப்போதுவரை அவர் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். 'நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்குத்தான் போட்டியே. ஒன்று தீய சக்தி திமுக; இன்னொன்று தூய சக்தி தவெக' என்பது அவரது பிரதான முழக்கங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனித்து போட்டி: சில வாரங்களுக்கு முன்பு வரை என்டிஏ கூட்டணிக்கு விஜய் சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், 'மதசார்பற்ற கொள்கையில் எப்போதும் நாங்கள் சமரசம் செய்துகொண்டதில்லை. நாங்கள் எப்போதுமே மக்களின் டீம்தான்' என சொல்லி தனித்து களமிறங்குவதை உறுதி செய்து; தொண்டர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தார். சங்கீதா பிரச்னை கொடுத்த தலை வலியை; விஜய்யின் அந்த அறிவிப்பு கொஞ்சம் மட்டுப்படுத்தியது என்றே சொல்லலாம்.
இரண்டு தொகுதிகளில் போட்டி: திமுக, அதிமுக கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் வைத்து தவெகவின் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தார். ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், புஸ்ஸி ஆனந்த் தி.நகரிலும் களம் காண்கிறார்கள். தவெக தலைவர் விஜய்யோ பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் களம் காண்கிறார். இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிடுவது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தோல்வி பயம்?: அதேசமயம் அவரது இரண்டு தொகுதி நிலைப்பாடு அவருக்குள் இருக்கும் தோல்வி பயத்தை காட்டுவதாகவும் விமர்சனம் எழுந்திருக்கிறது. தைரியம் இருந்திருந்தால் கொளத்தூரில் மு.க. ஸ்டாலினை எதிர்த்தோ அல்லது சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்தோ அவர் நின்றிருக்க வேண்டும் என குரல்கள் கேட்கின்றன. இப்படி கிண்டல்கள் எழுந்தாலும் விஜய்யை நினைத்து மற்ற கட்சிகள் கொஞ்சம் பயத்தில் இருப்பதாகவே தவெக தொண்டர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினின் பிளான்?: முக்கியமாக திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ வாக்குகள் நிறைய இருக்கின்றன. எனவே அதை மைண்டில் வைத்துதான் அங்கே விஜய் களமிறங்குகிறார் என்றே தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டு கிரீடத்தில் முள் மாதிரி குத்திக்கொண்டே இருக்கிறது. அதைத்தான் தவெக தனது பிரசார பீரங்கியில் முக்கிய குண்டாக செலுத்தவிருக்கிறது. மேலும் விஜய்க்கென்று 234 தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கி இருப்பதாக கருதுகிறார்களாம் திமுகவினர்.
அதன் காரணமாக தங்களால் முடிந்த அத்தனை வழிகளிலும் பரப்புரையை தொடங்கிவிட்டார்கள். அந்தவகையில் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் மு.க.ஸ்டாலினை பாராட்டி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினி பேசுகையில், "ஹெச்.ராஜா மு.க.ஸ்டாலினை எவ்வளவு விமர்சித்தார் என்று தெரியும். ஆனால் அவரையே சென்று ஸ்டாலின் பார்த்தார். இப்படி ஒரு நல்ல தலைவருக்குரிய பண்பு அவரிடம் இருக்கிறது" என்றிருக்கிறார். கமல் பேசுகையில், "அவர்களை (திமுக) விமர்சித்துவிட்டு இப்போது அவர்களுடன் இருக்கிறீர்களே என கேட்கிறார்கள். அவர்கள் அடுத்த முறை வென்று வந்தாலும் நான் விமர்சன குரல் எழுப்புவேன். ஏனெனில் அதுதான் எனது கடமை. சகோதரனின் குரல்" என்றிருக்கிறார்.
இதை பார்த்த தவெகவினரோ, 'விஜய்யை நினைத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினருக்கு பீதியாகிவிட்டது. அதன் காரணமாகத்தான் விஜய் பணியாற்றிய துறையிலிருந்து சூப்பர் சீனியர்களை இப்படி பேச சொல்லி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் விஜய்யை வீழ்த்துவதற்காக ஸ்டாலின் செய்த பிளான்தான். கண்டிப்பாக அந்த பிளானையெல்லாம் பிய்த்து எறிந்துவிட்டு கோட்டைக்குள் செல்வோம்' என பேச தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















