விஜய் சேதுபதி அவ்ளோதான்னு சொல்லிட்டாங்க.. சிங்கம்புலியை பார்த்து எமோஷனலான மக்கள் செல்வன்!
சென்னை: மகாராஜா, விடுதலை 2 என அடுத்தடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது விழா நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதினை வழங்கிய நிலையில், மேடையில் எமோஷனலாகி பேசியுள்ள காட்சிகள் வெளியாகி ரசிகர்களையும் எமோஷனலாக மாற்றியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதி பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் சரியாகவும் ஓடவில்லை. ஆனால் தொடர்ந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வில்லனாக நடித்த விஜய் சேதுபதி மீண்டும் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடாத நிலையில், விஜய் சேதுபதி இனிமேல் ஹீரோவாக நடிக்க லாயக்கில்லை போன்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. அப்போது இருங்க பாய் என்பது போல தனது ஐம்பதாவது படமான மகாராஜா படத்தைக் கொடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற விஜய் சேதுபதி அந்த படம் குறித்து பேசும் போது எமோஷனலாகிவிட்டார்.
மகாராஜாவை மறக்க மாட்டேன்: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவை தாண்டி சீன ரசிகர்களையும் இந்த அளவுக்கு கவரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த படத்துக்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுத்த மிகப்பெரிய அன்புக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன். இப்படி ஒரு கதையை எழுதி, அந்த கதாபாத்திரங்களை நடிகர்களுக்குள் புகுத்தி தான் விரும்பிய படி படத்தை இயக்கிய நித்திலனுக்கு எப்போதுமே நன்றி கடன் பட்டுள்ளேன் என்று கூறினார்.
சிங்கம் புலிக்கு பாராட்டு: மகாராஜா படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக மாறியது சிங்கம் புலி அண்ணனின் நடிப்புதான் என்றும் ஆரம்பத்தில் அந்த கதாபாத்திரத்தில் இவரை பயன்படுத்தலாம் என இயக்குநர் சொல்லும் போது நான் கொஞ்சம் கூட செட்டாகாது என நினைத்தேன். ஆனால், அந்த கதாபாத்திரத்தின் லேயரை புரிந்து கொண்டு சிங்கம்புலி அண்ணன் நடித்து மிரட்டி விட்டார். எடிட்டிங்கில் பார்க்கும் போதே அண்ணனுக்கு போன் செய்து வாழ்த்தினேன். இப்படியெல்லாம் நடிக்கக்கூடிய நடிகர்கள் தேவை என்றார்.

எமோஷனலான விஜய் சேதுபதி: தான் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில், விஜய் சேதுபதி அவ்வளவுதான் அவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். ஆனால், மகாராஜா விஜய் சேதுபதி என மகாராஜா படம் என்னை மீண்டும் தூக்கி நிறுத்தியதும் சினிமாவுக்கு உண்மையாக இருக்கும் கலைஞனை சினிமா பாதுகாக்கும் என்பதை புரிந்துக் கொண்டேன் என எமோஷனலாகி பேசினார் விஜய் சேதுபதி.
பாலாவுக்கு முதல் சம்பளம்: கேபிஒய் பாலா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், அவரும் ஹீரோவாகிவிட்டார் என ரசிகர்கள் கூறியதும், அவரே பெரிய ஹரோ அவர் முன் அதெல்லாம் ஏன் சொல்றீங்க என பாலா கூற, எனக்கு சந்தோஷம் தான் நீ ஹீரோ ஆனது என்று அரவணைக்க, எனக்கு முதல் சம்பளம் கொடுத்த முதலாளியே விஜய் சேதுபதி தான் என்றார். ஜுங்கா படத்தில் சின்ன ரோலில் பாலா நடித்ததையும் விஜய் சேதுபதி நினைவுக்கூர்ந்தார்.


Click it and Unblock the Notifications











