புதிய படத்தில் பாலிவுட் ஹீரோயினுடன் இணையும் மக்கள் செல்வன்... விரைவில் சூட்டிங்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தனது சிறப்பான 11 ஆண்டுகால திரைப்படத்தை இன்று கொண்டாடி வருகிறார்.
இந்த சிறப்பான தினத்தில் அவரது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் அவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினுடன் இணைகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் உள்ளிட்ட தனது ஆரம்ப கால படங்களின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர். தன்னுடைய நாயகன் அந்தஸ்து குறித்து கவலை கொள்ளாமல் வித்தியாசமான திரைக்கதைகளில் வித்தியாசமான ரோல்களில் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கேரக்டர்கள்
திடீரென பார்த்தால் வில்லனாக மிரட்டுகிறார். விஜய், ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கும் வில்லனாகியுள்ளார். திடீரென பார்த்தால் கிழவர் வேடத்தில் அதற்கான உடல்மொழியுடன் நடித்து அசத்துகிறார்.

சளைக்காத நடிப்பு
கமர்ஷியல் படங்களிலும் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லாபம், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. ஆயினும் அடுத்தடுத்த படங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சளைக்காமல் நடித்து வருகிறார்.

கடைசி விவசாயி படம்
இவரது நடிப்பில் அடுத்ததாக கடைசி விவசாயி படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் வெப் தொடர்கள், டிவி நிகழ்ச்சிகள் என்று எதையும் விட்டு வைப்பதில்லை விஜய் சேதுபதி.

கேமியோ ரோல்கள்
கேமியோ ரோல்களிலும் திரைப்படங்களில் இவரை பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடிகர் ஜனகராஜின் கோரிக்கையை ஏற்று ஒபாமா என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதிலும் கேமியோ ரோல் தான். இந்த செய்தி சமீபத்தில் வைரலானது.

11 ஆண்டுகள் நிறைவு
இதனிடையே, இவர் தன்னுடைய திரைப்பயணத்தில் தற்போது 11 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து இவருக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்நது வருகின்றனர்.

மக்கள் செல்வன் என்ற பாராட்டு
மக்கள் செல்வன் என்ற பாராட்டுக்கு உள்ளாகியுள்ள விஜய் சேதுபதி தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் இவர் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிவுட்டிலும் விஜய் சேதுபதி
பான் இந்தியா படங்கள் மூலம் பாலிவுட்டிலும் கவனம் பெற்றுள்ள விஜய் சேதுபதி, தற்போது மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உருவாகவுள்ள புதிய இந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாகியுள்ளார் பாலிவுட்டின் முன்னணி பிரபலம் கத்ரினா கையிப்.

கத்ரினா கையிப் மகிழ்ச்சி
படத்தை இயக்கவுள்ளார் ஸ்ரீராம் ராகவன். இதுகுறித்து கத்ரினா கையிப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீராமுடன் தான் பணியாற்ற எப்போதும் விரும்பியதாகவும் தற்போது அது நனவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video

கிறிஸ்துமஸ் சிறப்பு படம்
மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற தான் ஆர்வமுடன் உள்ளதாகவும் கத்ரினா தெரிவித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது. படம் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் படமாக இருக்கும் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











