ஐயா உங்களை ஒரு சைக்கோனு நினைச்சேன்.. மிஷ்கினிடம் ஓபனாக சொல்லி வாட்ச்சை பரிசு பெற்ற விஜய் சேதுபதி
சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் மிஷ்கின் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்ற வரிசையில் இணைந்தார்.

முகமூடி மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
பிசாசு: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். அடுத்ததாக அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது.
நடிகர் மிஷ்கின்: இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகிறார் மிஷ்கின். சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் லியோ, சிவகார்த்திகேயனுடன் மாவீரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அதேபோல் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வணங்கான் படத்திலும் முக்கியமான ரோலை மிஷ்கின் ஏற்றிருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் இனி இயக்கவேமாட்டாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பினர்.
ட்ரெய்ன்: ஆனால் மிஷ்கின் அந்த சந்தேகத்தை போக்கும் விதமாக மீண்டும் படம் இயக்குகிறார். விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் என்ற படத்தை இயக்குகிறார் அவர். அதற்கான பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து மிஷ்கின் படம் இயக்குவதால் நிச்சயம் படம் சிறப்பாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
விஜய் சேதுபதி பேச்சு: இந்நிலையில் மிஷ்கின் குறித்து விஜய் சேதுபதி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய அவர், "மிஷ்கினை ஒரு சைக்கோ என்று நினைத்துக்கொண்டு அவர் இயக்கிய சைக்கோ படத்தை நான் பார்க்காமலேயே இருந்தேன். ஆனால் ஒருமுறை சைக்கோவை பார்த்து அசந்துவிட்டேன். அருமையான திரைப்படம் அது. மிஷ்கினை சந்தித்தபோது, 'ஐயா நான் உங்களை சைக்கோனு நினைச்சிருந்தேன். அதான் சைக்கோ படம் பார்க்காமல் இருந்தேன். ஆனால் படம் சூப்பராக இருக்கு' என்று சொன்னேன். அவர் சிரித்துவிட்டு தான் கையில் கட்டியிருந்த ரேடோ வாட்ச்சை எனக்கு பரிசாக கொடுத்துவிட்டார். ஒரு இயக்குநரை சைக்கோ என்று சொல்லி வாட்சை பரிசாக பெற்றவன் நானாகத்தான் இருப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











