Vijay Sethupathi - விஜய் சேதுபதிக்கு அந்த நடிகருடன் நடிப்பதற்குத்தான் ஏக்கமாம்.. மேடையிலேயே வைத்த கோரிக்கை
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டியவர் விஜய் சேதுபதி. பிறகு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து விஜய் சேதுபதியின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்தனர். அவர்களின் ஒரே சாய்ஸாக இருந்தது விஜய் சேதுபதிதான்.

வரிசை ஹிட்: 2010 ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு வரை விஜய் சேதுபதியின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வெரைட்டியை காண்பித்தார் சேது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.
வில்லன்: நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லனாகவும் நடித்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார். ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்த அவர் கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார்.
இனி ஹீரோதான்: மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. எனவே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவர் இப்போது மகாராஜா, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். மேலும் மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சலூன்: இந்நிலையில் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய விஜய் சேதுபதி, "சத்யராஜ் நடித்த அமைதிப்படை மற்றும் சில படங்களை இப்போதுவரைக்கும் நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவரது காமெடி சென்ஸ், ரொமாண்ட்டிக் காட்சிகள் அனைத்தையும் நான் மிகவும் ரசிப்பேன்.
கோரிக்கை: இந்த மேடையில் அவரிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். சத்யராஜ் சார் உங்ககூட ஒரே ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும். அந்த வாய்ப்பை கொடுங்கள் சார். அதற்காகத்தான் நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். அப்படி நாம் நடிக்கும் படம் கண்டிப்பாக டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாகத்தான் இருக்க வேண்டும். உங்களை கெஸ்ட் ரோலில் எல்லாம் நான் நடிக்கவிட மாட்டேன்" என்றார்.
சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கியிருக்கிறார். இவர்தான் விஜய் சேதுபதியை வைத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ் மட்டுமின்றி சென்சேஷனல் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











