Vijay Sethupathi: “நான் வில்லனா நடிச்சா ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆகுதாம்..” டென்ஷனான விஜய் சேதுபதி!
சென்னை: கோலிவுட்டின் வெரைட்டியான நடிகர்களில் விஜய் சேதுபதி மிக முக்கியமானவர்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.

ஹீரோ மட்டுமில்லாமல் வில்லன், கேமியோ ரோல்களில் நடிப்பதிலும் விஜய் சேதுபதி தயங்கியது கிடையாது.
இந்நிலையில், இனி வில்லன் ரோலில் நடிக்க மாட்டேன் எனவும் அதற்கான காரணத்தையும் ஓபனாக கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
இனி வில்லனாக நடிக்க மாட்டேன்
திரையுலகில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கியவர் விஜய் சேதுபதி. தொடர் போராட்டம் காரணமாக இன்று பான் இந்தியா ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார். சின்ன சின்ன கேரக்டர், ஹீரோவின் நண்பன், நெகட்டிவ் ரோல் என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார் விஜய் சேதுபதி.
பீட்சா, சூது கவ்வும் என வித்தியாசமான கதைகளில் நடித்ததன் மூலம் முன்னணி ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார். அதேநேரம் தேவைப்பட்டால் ஹீரோ இமேஜை விட்டுவிட்டு வில்லன் கேரக்டரிலும் மாஸ் காட்டத் தொடங்கினார். மாதவனுடன் விக்ரம் வேதா, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக பேட்ட, விஜய்க்கு வில்லனாக மாஸ்டர், கமல்ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இதுபோன்ற விஜய் சேதுபதியின் வெரைட்டியான நடிப்புக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அதேநேரம் டோலிவுட், பாலிவுட்டில் இருந்தும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க அழைப்புகள் வந்தன. அதன்படி, தெலுங்கில் உப்பென்னா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கடைசியாக ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் மிரட்டியிருந்தார்.
இந்நிலையில் திடீரென இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். காந்தி டாக்ஸ், மகாராஜா படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அப்போது இனி வில்லனாக நடிக்க மாட்டேன் எனவும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். “வில்லனாக நடிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன, சில நேரங்களில் ஹீரோ தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதால் தான் வில்லனாக நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “வில்லன் கேரக்டரில் நடித்தால் நிறைய பாகுபாடுகள் பார்க்கப்படுகின்றன. அதேபோல், ஹீரோவை விட வில்லன் கேரக்டர் நன்றாக வந்துவிடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சில படங்களில் வில்லனாக நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் இனி வில்லன் கேரக்டரில் நடிக்க மாட்டேன்” என உறுதியாகக் கூறியுள்ளார். விஜய் சேதுபதி கடைசியாக ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதனை குறிப்பிட்டு தான் விஜய் சேதுபதி பேசினாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











