மறுபடியும் முதலில் இருந்தா?.. சூர்யாவுக்கு வில்லனாக நடிப்பாரா விஜய் சேதுபதி?.. சூர்யா 45 அப்டேட் இதோ
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்தது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா; தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கோயம்புத்தூரில் நடந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. எந்தக் கதை கொடுத்தாலும் அந்தக் கதைக்காக தன்னை முழுதாக ஒப்புக்கொடுக்கும் அவர் கடைசியாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அப்படத்தில் திஷா பதானி, நட்டி, கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்துக்கு தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவும் ஏற்றிவிட்டார்கள். ஆனால் அந்தப் படம் பெரும் வெற்றியை பெறுவதற்கு பதிலாக படுதோல்வியை சந்தித்தது.

சக்சஸ் மீட் எங்கே?: குறிப்பாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்த ஞானவேல் ராஜா, 'டிசம்பர் மாதம் நடக்கும் கங்குவா படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்று கூறினார். அதேபோல் இரண்டாயிரம் கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என்றும் ஞானவேல் ராஜா நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்னபடி எதுவுமே நடக்கவில்லை. அதேபோல் டிசம்பர் மாதம் வந்துவிட்டது எங்கே சக்சஸ் மீட் என்றும் ரசிகர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜுடன் படம்: இதற்கிடையே கங்குவா படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்தார் அவர். அந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. கார்த்திக்கின் மேக்கிங் எப்போதும் வித்தியாசமாக இருக்கும் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்களும், சூர்யாவும். கங்குவா படம் கொடுத்த தோல்வியை இந்தப் படம் சரிகட்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் அவர்கள்.
ஆர்.ஜே.பாலாஜி படம்: கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நடித்துவருகிறார் அவர். இதில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். முதலில் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவர் வெளியேறியதைத் தொடர்ந்து சாய் அப்யங்கர் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் கோவையில் இப்போது மும்முரமாக நடந்துவருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகின.
விஜய் சேதுபதி வில்லனா?: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பாலாஜி விரும்புவதாகவும்; அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சேதுபதி இதற்கு ஒத்துக்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், இனி தான் வில்லனாக நடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் காரணமாக சூர்யாவுக்கு வில்லனாக நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











