தத்துவமாக பேச இதுதான் காரணமாம்.. ஆஹா விஜய் சேதுபதி சொன்ன செம விஷயத்தை பாருங்க
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா, விடுதலை 2 ஆகிய படங்களில் மகாராஜா மெகா ஹிட்டாகவும், விடுதலை 2 சுமார் ஹிட்டாகவும் அமைந்தன. அதனையடுத்து நேற்று வெளியான Ace திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடித்த அவர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்ததாக அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்,சூதுகவ்வும், பீட்சா என்ற வரிசையாக படங்கள் ஹிட்டடித்தன. இதன் காரணமாக அவரது மார்க்கெட்டும் சரசரவென்று உயர்ந்தது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை அவர் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற மொழிகளிலும்: ஒருபக்கம் கமர்ஷியல் ஆக்டிங்கில் பட்டையை கிளப்பிய அவர் மறுபக்கம் சோதனை முயற்சிகளிலும் இறங்கினார். அதேபோல் நட்புக்காக ரம்மி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். ஆனால் அதுதான் தான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு என்பதையும் பின் நாட்களில் அவர் கூறினார் என்பது நினைவுகூரத்தக்கது. தமிழில் மட்டும் கலக்கிவந்த அவர் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும்கூட தனது தடத்தை பதித்தார். அப்படி அவர் நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றன.

வில்லன் சேது: ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவர் கலக்கிவந்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை ரொம்பவே மிரட்டலாக செய்திருந்தார். இருந்தாலும் அவர் தொடர்ந்து வில்லனாக மட்டுமே நடிக்கக்கூடாது ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நிறைவேற்றும் விதமாக இனி ஹீரோ கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறி அப்படியே நடிக்கவும் செய்திருக்கிறார்.
இரண்டுமே ஹிட்: அந்தவகையில் அவர் நடித்த மகாராஜா, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு பெரும் பெயரை பெற்றுக்கொடுத்தன. முக்கியமாக மகாராஜா வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. உலகளவிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சீனாவில் அந்தப் படம் வசூல் வேட்டை நடத்தியதாகவும் தெரிகிறது. அடுத்ததாக வெளியான விடுதலை 2 திரைப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது.
தத்துவ சேது: நேற்று வெளியான Ace திரைப்படமும் சுமார் ரகம்தான் என்ற பெயரை பெற்றிருக்கிறது. இதற்கிடையே விஜய் சேதுபதியின் நடிப்புக்கு மட்டுமின்றி அவரது செயல்பாடுகள், பேச்சுக்கள் உள்ளிட்டவைகளுக்கும் ஒருதரப்பினர் ரசிகர்களாக இருக்கிறார்கள். வாழ்வை வேறு கோணத்தில் பார்க்கும் அவர் தத்துவார்த்தமாக பேசுவதிலும் வல்லவர். இந்நிலையில் அதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருக்கிறார்.
ஏன் அந்த மாதிரி?: அவர் பேசுகையில், "எனக்கு இயல்பிலேயே தத்துவ மனநிலை இருப்பதாக நினைக்கிறேன். எதற்காக இந்த வாழ்க்கை என்ற கேள்வி இன்னும் என்னை விட்டு போகவில்லை. யார் என்ன பதில் சொன்னாலும் அது எனக்கு திருப்தியளிப்பதில்லை. ஆசைதான் துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் சொல்கிறார். ஆனால் ஆசையில்லாமல் எப்படி ஒருவன் வாழ முடியும், ஏன் வாழ வேண்டும் என்றும் எனக்கு தோன்றுகிறது. சமீபத்தில்தான் கவிதைகள் படிக்க ஆரம்பித்தேன். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் மூன்று பாடல்களும் எழுதியிருக்கிறேன். அதனால் வார்த்தைகள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே புத்தகங்களும் அதிகம் படிக்க ஆரம்பித்திருக்கின்றேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











