வசந்தகுமாரன் படத்தில் நடிக்கவில்லை.. என்னை திட்டி மிரட்டுகிறார் தயாரிப்பாளர்!- விஜய் சேதுபதி
சென்னை: நான் நடிக்க மறுத்த வசந்த குமாரன் படத்துக்கு வேண்டுமென்றே இன்று விளம்பரம் தந்துள்ளனர். தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியம் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார் என்று நடிகர் விஜய் சேதுபதி புகார் கூறியுள்ளார்.
வசந்தகுமாரன் பட பஞ்சாயத்து கடந்த சில வாரங்களாகவே கோடம்பாக்கத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஸ்டுடியோ 9
ஸ்டுடியோ 9 என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சுரேஷ் களஞ்சியமும் விஜய் சேதுபதியும் ஒரே ஊர்க்காரர்கள். இருவரும் நண்பர்களாக இருந்த நேரத்தில், தன் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார் சுரேஷ்.

வசந்த குமாரன்
அப்படி அறிவிக்கப்பட்டதுதான் இந்த வசந்த குமாரன். ஆனால் அறிவித்தபடி உடனே படம் தொடங்கப்படவில்லை. பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டிருக்க, இந்தப் பக்கம் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. தனுஷ் தயாரிக்கும் படம் இது.

நெருக்கடி
இதற்கிடையில் விஜய் சேதுபதி - சுரேஷ் நட்பில் விரிசல் உண்டாக, இருவருக்கும் மோதல் முற்றிப் போனது. விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். உடனே தனக்கு படம் செய்து தந்தே ஆக வேண்டும் என நெருக்கடி தர ஆரம்பித்தாராம் சுரேஷ்.

2 கோடி கொடு
ஆனால் விஜய் சேதுபதி நடிக்க மறுக்கவே, ஒரு திடீர் அறிவிப்பு கொடுத்தார் சுரேஷ். விஜய் சேதுபதியால் தனது நிறுவனத்தையே மூடப்போவதாகவும், தனக்கு 2 கோடி நஷ்ட ஈடு வேண்டும் என்றும் அறிக்கை விட்டார் சுரேஷ்.

முறையீடு
உடனே இந்தப் பிரச்சினையை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் அமீர் போன்றவர்களிடம் கொண்டு போனார் விஜய் சேதுபதி. அங்கும் தொடர்ந்து பஞ்சாயத்து பேசினார்கள்.

விளம்பரம்
இந்த நிலையில் இன்றைய நாளிதழில் விஜய் சேதுபதி நடிக்கும் வசந்தகுமாரன் என்று விளம்பரம் வெளியாகியுள்ளது. இதனை கடுமையாக எதிர்த்துள்ள விஜய் சேதுபதி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மிரட்டல்
அதில், சுரேஷின் தவறான நடவடிக்கைகள் மற்றும் தகாத வார்த்தைகள் காரணமாகவே, தான் வசந்த குமாரன் படத்திலிருந்து விலகியதாகவும், அந்தப் படத்துக்கு ரூ 9 லட்சம் மட்டுமே அட்வான்ஸ் பெற்றதாகவும், அதையும் வட்டியுடன் திருப்பித் தருவதாகக் கூறியும் பல கோடி கேட்டு சுரேஷ் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகார்
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடமும் தயாரிப்பாளர் சங்கத்திலும் தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்துள்ளதாகவும், படத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவிக்குமாறு கோரியிருந்த நிலையில் இன்று வசந்த குமாரன் படத்தில் தான் நடிப்பதாக விளம்பரம் வந்துள்ளது, தனது பெயரைக் கெடுக்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார் விஜய் சேதுபதி.

நானும் ரவுடிதான்
இப்போது புறம்போக்கு மற்றும் நானும் ரவுடிதான் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாவும், வசந்த குமாரன் படத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ள விஜயசேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











