அரசியலில் விஜய்.. டிவி சேனலும் தொடங்கப்போறாராம்.. பெயர் என்ன தெரியுமா?.. ஃபுல் ஃபார்மில் இருக்காரே
சென்னை: விஜய் சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய், திராவிட மாடல் என்ற வார்த்தையை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். அதனையடுத்து தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவை அவர் எதிர்க்கிறார் என்ற எண்ணம் அனைவரிடமும் உருவாகிவிட்டது. சூழல் இப்படி இருக்க விஜய் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களம் காண்கிறது. சூழல் இப்படி இருக்க கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் மொத்தம் எட்டு லட்சம் பேர் கலந்துகொண்டதாகவும்; 80 கோடி ரூபாய்வரை விஜய் அம்மாநாட்டுக்காக செலவழித்ததாகவும் கடந்த சில நாட்களாகவே பேச்சு ஓடுகிறது. இதையெல்லாம் மீறி விஜய்யின் பேச்சுதான் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

என்ன பேசினார்?: மாநாட்டில் பேசிய விஜய் தங்களது கொள்கைகள், வழிகாட்டிகள் குறித்து பேசினார். அதேபோல் பிளவுவாத அரசியல் நடத்தும் சக்திகளை அப்புறப்படுத்துவோம் என்றும் முழங்கினார். அதுவரை அவரது பேச்சு எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை. ஆனால் 'அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?', 'திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு ஏமாற்றுகிறீர்கள்' என்று தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுகவை ஓபனாகவே அடித்தார். அவரது இந்தப் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் மீது சந்தேகம்: விஜய்யின் அந்தப் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. முக்கியமாக அவரை ஜோசப் என்று கூறி மத வட்டத்துக்குள் பாஜகவின் ஹெச்.ராஜா அடைத்தபோது இதே திராவிட மாடல்தான் விஜய்க்கு ஆதரவாக நின்றது. இப்போது அவரது பேச்சை பார்க்கையில் இவர் பாஜகவின் ஆதரவாளராக போகப்போக மாறிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுவதாக ஒருதரப்பினர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
திருமாவளவன் கண்டனம்: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் சொன்னாலும் அவர் பாசிசத்தை எதிர்ப்பவர்களை நக்கல் செய்துவிட்டார். மேலும் விழா கால தள்ளுபடி போன்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என கூறுகிறார் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் அறிக்கை வெளியிட்டு கண்டனத்தை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சில கருத்துக்களை முன்வைத்து விஜய்யை விமர்சனம் செய்தார்.
புதிய சேனல்: தொடர்ந்து விஜய் மீது தமிழ்நாடு அரசியல் களத்தில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதனையடுத்து நேற்று தவெக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி தனிநபர் தாக்குதலை கையில் எடுக்கக்கூடாது என்று விஜய் கூறியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் விஜய் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் புதிதாக சேனல் ஒன்றை தொடங்கப்போவதாகவும்; அதற்கு தமிழ் ஒளி என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாள் முழுக்க வாரம் முழுக்க ஒளிபரப்பாகும் செய்தி சேனலாக தமிழ் ஒளி இருக்கும் என்றும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











