பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி முதல் கூகுள் கூகுள் வரை.. 25வது பாடலை நோக்கி விஜய்!
சென்னை: விஜ்ய் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் அவ்வப்போது அழகாக பாடவும் கூடியவர். அவரது பாடல்கள் பல ஹிட்டாகியுள்ளன. இப்போது அவர் தனது குரலில் 25வது பாடலைப் பாட தயாராகி வருகிறார்.
விஜய் இதுவரை பாடியுள்ள பாடல்கள் குறித்த ஒரு ரவுண்டப்..

முதல் பாட்டு பாம்பே சிட்டி
தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடித்த ரசிகன் படத்திலிருந்துதான் விஜய் பாடத் தொடங்கினார். அந்தப் படத்தில் இடம் பெற்ற பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி பாடல் செமத்தியான கொத்துக்கறி பாட்டு.

ஒரு கடிதம் எழுதினேன்...!
சுக்கா ரொட்டி பாட்டுக்குப் பிறகு அப்படியே டக்கென மாறி அருமையான மெலடியைக் கொடுத்தார் விஜய். அதுதான் ஒரு கடிதம் எழுதினேன் அதில் உயிரை அனுப்பினேன் பாடல்.. தேவா படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் விஜய்யை ஒரு முழுமையான பாடகராக அடையாளம் காட்ட உதவியது.

அம்மாவுடன் சேர்ந்து பாடிய டப்பாங்குத்து
விஷ்ணு படத்தில் தனது தாயார் ஷோபாவுடன் இணைந்து ஒரு டப்பாங்குத்துப் பாடலைப் பாடி அனைவரையும் அதிர வைத்தார் விஜய். அந்தப் பாடல் தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா.

அம்மாவுடன் சேர்ந்து இன்னொரு பாட்டு
அதேபோல 1997ல் வெளியான ஒன்ஸ்மோர் படத்தில் தனது தாயார் ஷோபாவுடன் இணைந்து மீண்டும் பாடினார் விஜய். அந்தப் பாட்டு ஊர்மிளா ஊர்மிளா.

இசைஞானியுடன் முதல் பாடல்
கொசக்கா முச்சக்கா என்று பாடி வந்த விஜய் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பாடிய படம் காதலுக்கு மரியாதை. இந்தப் படத்தில் விஜய்யை அட்டகாசமாக பாட வைத்திருந்தார் ராஜா. விழியில் இமை மூடி இதயக் கதவொன்று திறந்ததே என்ற அந்தப் பாடல் அப்போது பெரும் ஹிட்டான பாடல்.

சூர்யாவுக்காக சில பாடல்கள்
தனக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் பாடியவர் விஜய். தனது நண்பரும், சக ஹீரோவுமான சூர்யாவுக்காக பெரியண்ணா படத்தில் 3 பாடல்களைப் பாடியிருந்தார் விஜய். அதில் ஹிட்டான பாடல் நான் தம்மடிக்கிற ஸ்டைலைப் பார்த்து... அதேபோல விக்னேஷுக்காக வேலை படத்தில் கலக்குது ஒரு காணா என்ற பாடலைப் பாடியிருந்தார்.

பத்ரியில் லைலா
பத்ரி படத்தில் இடம் பெற்ற என்னோட லைலா வர்றாளே ஸ்டைலா என்ற பாடல் மட்டுமல்ல, அதில் விஜய்யின் நடனமும் கூட ஹிட்டானது.

வாடி வாடி சச்சின்
சச்சின் படத்தில் விஜய் பாடியதே சமீப காலத்தி்ல அவரது கடைசிப் பாடலாக இருந்தது. வாடி வாடி கை படாத சிடி என்ற அந்த டப்பாங்குத்துப் பாட்டுக்குப் பின்னர் பாடாமல் இருந்து வந்தார் விஜய்.

24வது பாடல்
சச்சின் படத்திற்குப் பிறகு 7 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது துப்பாக்கி படத்தில் அவர் பாடியிருந்தார். கூகுள் கூகுள் பாடல் ஹிட்டாகவே தற்போது மீண்டும் தொடர்ந்து பாடும் ஆசை விஜய்க்கு வந்து விட்டதாம்.. கூகுள் கூகுள் விஜய்க்கு 24வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் சில்வர் ஜூப்ளி பாடல்
அடுத்து ஜி.வி.பிரகாஷின் இசையில் தனது 25வது பாடலைப் பாடப் போகிறாராம் விஜய். அந்தப் பாடலுக்கான ட்யூனை ஏற்கனவே பிரகாஷ் போட்டு விட்டாராம். நா. முத்துக்குமார் அந்தப் பாடலை எழுதியுள்ளாராம். விஜய் ரிஹர்சலில் இருக்கிறாராம்.

அடுத்து மீண்டும் ராஜாவுடன்!
இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்து அனேகமாக இளையராஜாவின் இசையில் விஜய் பாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











