விஜயகாந்த் அரசாங்கம்!
கேப்டன் விஜயகாந்த் நடிக்கும் 150வது படமான வித்தகனின் பெயர், அரசாங்கம் என மாறியுள்ளது.
விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் வித்தகன். இதை அவரது மச்சான் சுதீஷ் தயாரிக்க விஜயகாந்த் நடிக்கிறார். இதில் அவருக்கு 2 ஜோடிகள்.பெரும் பொருட் செலவில் விஜயகாந்த்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு முதலில் எம்.ஜி.ஆர். என்று பெயர் சூட்டினர். பின்னர் வித்தகன் என மாற்றினர். இந்த நிலையில் அரசாங்கம் என மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த வாரம் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று படம் திரைக்கு வரும்.
இதை எனது கேப்டன் சினி கிரியேஷன்ஸ்தான் தயாரிக்கிறது. இப்படம் காவல்துறை சம்பந்தப்பட்ட படமாகும்.
கனடா, அமெரிக்கா மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பகுதி படத்தை ஷூட் செய்யவுள்ளோம்.
படத்தின் பெயர் குறித்து நிறையக் குழப்பம் இருந்தது. எம்.ஜி.ஆர். என்று நாங்கள் பெயர் சூட்டினோம். ஆனால் அதை வேறு ஒரு நடிகர் பதிவு செய்து வைத்திருந்தார். இதையடுத்து பல பெயர்களைப் பரிசீலித்து தற்போது அரசாங்கம் என்று மாற்றியுள்ளோம். சர்க்கார் என்று வைக்கத்தான் யோசித்தோம். ஆனால் அது வட மொழியாக இருக்கிறது என்று யாராவது பிரச்சினை கிளப்பலாம் என்பதால் அரசாங்கம் என்று மாற்றி விட்டோம் என்றார் விஜயகாந்த்.


Click it and Unblock the Notifications











