Jana Nayagan vs The Raja Saab: பிரபாஸையே பின்னுக்குத்தள்ளிய விஜய்.. ஓவர்சீஸில் கில்லி.. பராசக்தி பாவம்?
சென்னை: கல்கி 2898 ஏடி திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டிய நிலையில், பிரபாஸின் அடுத்த படமான தி ராஜா சாப் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஆனால், மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை.
சலார் 2, ஸ்பிரிட், கல்கி 2 உள்ளிட்ட படங்களை தான் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்துக்கு ஓவர்சீஸில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இன்னும் படம் வெளியாக 18 நாட்கள் உள்ள நிலையில், இப்போதே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஓவர்சீஸ்களில் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து விட்டது. இங்கிலாந்தில் ஏற்கனவே டிக்கெட் புக்கிங் அனல் பறந்துக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் பிரபாஸ் படத்தை விட விஜய்யின் ஜன நாயகன் முந்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தி ராஜா சாப் டிக்கெட் புக்கிங்: மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பேய் படமான தி ராஜா சாப் படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி வரும் நிலையில், இதுவரை பெரிதாக ரசிகர்களை எதுவுமே கவரவில்லை. ராஜா சாப் படத்தின் சஹானா சஹானா பாடல் வெளியீட்டை விட நிதி அகர்வால் கூட்ட நெரிசலில் சிக்கியது தான் டிரெண்டானது. அமெரிக்காவில் தி ராஜா சாப் படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ள நிலையில், 960 ஷோக்களில் 4,699 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக Koimoi வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது. ஒரு ஷோவுக்கு சராசரியாக 4 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 136 ஆயிரம் டாலர்கள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபாஸை முந்தும் விஜய்: அமெரிக்காவில் இதுவரை ஜன நாயகன் 148 ஷோக்களுக்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், ஒரு ஷோவுக்கு சுமார் 13 டிக்கெட்டுகள் வீதம் விற்பனையாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 41.9 ஆயிரம் டாலர் வசூல் வந்துள்ளதாம். வருமானத்தை பொறுத்தவரையில், பிரபாஸின் ராஜா சாப் அதிகம் வசூல் செய்தாலும், நாளுக்கு நாள் டிக்கெட் புக்கிங் அதிகரிக்கும் சதவீதம் பிரபாஸ் படத்துக்கு 4 சதவீதமும் விஜய் படத்துக்கு 119 சதவீதம் ரீதியில் உள்ள நிலையில், படம் வெளியாகும் சமயத்தில் பிரபாஸை விஜய் முந்திவிடுவார் என கணிக்கப்படுகிறது.

சமாளிக்குமா பராசக்தி?: பிரபாஸ் மற்றும் விஜய் படங்கள் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஓவர்சீஸில் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே பராசக்தி வசூல் செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், விஜய் படத்துடன் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், அமரன் படம் அளவுக்கு வசூல் செய்வது சிரமம் தான் என்கின்றனர். வரும் பொங்கலுக்கு பாக்ஸ் ஆபீஸில் யாரு கில்லி என்பது தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











