GOAT 3ஆவது சிங்கிளை விடுங்க.. தளபதி 69 நிலை என்ன தெரியுமா?.. விஜய் செம ஸ்பீடு போல
சென்னை :விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருப்பதாகவும்; அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தளபதி 69 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே ரிலீஸுக்கு இருப்பதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கட்சியை தொடங்கியிருக்கிறார்.

விரைவில் மாநாடு: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தவெக போட்டியிடவும் இல்லை; வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவுமில்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது. கண்டிப்பாக தனித்துதான் போட்டியிடுவார் விஜய் என்று கருதப்படுகிறது. விரைவில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதற்காக இடம் பார்க்கும் பணிகளில் புஸ்ஸி ஆனந்த் இறங்கியிருக்கிறார். அநேகமாக மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய நான்கு இடங்களில் ஒரு இடத்தில் மாநாடு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஒரு படம்தான்: அரசியலில் களமிறங்கியிருப்பதால் முழுக்க முழுக்க அதில் மட்டுமே கவனம் செலுத்தவிருக்கிறார் விஜய். எனவே இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டபோதே தெளிவுப்படுத்தினார். இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேசமயம் கண்டிப்பாக விஜய்யை கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அவர்களது முழு கவனமும் இப்போது இருக்கிறது.
தளபதி 69: அந்த கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் சமூகம் சார்ந்து சிந்தித்து படம் எடுக்கக்கூடியவர்களில் வினோத் தனித்துவமானவர். அவர் இயக்கிய வலிமை, துணிவு போன்ற படங்கள்கூட அந்த ஜானரில்தான் வந்தன. ஆனால் இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றன. இருந்தாலும் அவர் தொட்டிருந்த கதைக்களம் பலரது பாராட்டை பெற்றது. எனவே அரசியலுக்கு விஜய் வந்திருக்கும் சூழலில் அவரது கடைசி படம் தரமானதாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில்தான் விஜய் வினோத்தை ஃபிக்ஸ் செய்திருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
தொடங்கிய லுக் டெஸ்ட்: இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோட் படத்தில் ரிலீஸுக்கு பிறகு வரும் என்று கூறுகிறார்கள் திரைத்துறையினர். சூழல் இப்படி இருக்க படம் பற்றிய புதிய தகவ்ல ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கான லுக் டெஸ்ட்டை விஜய்யை வைத்து நடத்திவருகிறாராம் வினோத். சென்னையில் இருக்கும் ஸ்டூடியோ ஒன்றில் இது நடந்துவருவதாகவும்; விஜய் படு மாஸாக காட்சியளிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











