சீயானின் முப்பெரும் விருந்து
செல்வராகவனுடன் முதல் முறையாக கை கோர்க்கிறார் சீயான் விக்ரம்.
கமலுக்கு அடுத்து நடிப்பை தவம் போல பாவிக்கும் நடிகராக விளங்குகிறார் விக்ரம். ஆனால் அந்நியனுக்குப் பிறகு அவரது மார்க்கெட்டில் பெரும் வறட்சி.அந்நியனுக்குப் பிறகு கடந்த 3 வருடங்களில் விக்ரம் நடித்து வெளியான ஒரே படம் மஜாதான். அதன் பின்னர் அவர் லிங்குச்சாமியின் பீமாவில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்துக்கும், லிங்குச்சாமிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் படம் பாதியில் நின்றது.
பின்னர் அது சரியாகி மறுபடியும் படப்பிடிப்பு ஆரம்பித்த வேளையில் ரத்னம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். அது ஒருவழியாக சரியாகி இப்போது படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டனர். போன பொங்கலுக்கே வந்திருக்க வேண்டிய படம் தற்போது ஜூன் மாத வாக்கில் ரிலீஸாகவுள்ளது.
பெரும் இடைவெளி விழுந்து விட்டதால் அதிருப்தியாகிப் போன விக்ரம் அதை சமாளிக்க இப்போது 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். முதலில் கந்தசாமியில் நடிக்கிறார். இப்படத்தை சுசி.கணேசன் இயக்குகிறார்.
இதை முடித்து விட்டு சீமானுடன் இணைகிறார். ஆனால் சீமான், மாதவனை வைத்து வாழ்த்துக்கள் என்ற படத்தை இயக்கவுள்ளதால் அதை முடித்து விட்டே விக்ரமிடம் வரவுள்ளார்.
இந்த இடைவெளியை வேஸ்ட் செய்ய விரும்பாத விக்ரம், செல்வராகவனுடன் இணைந்து புதிய படம் ஒன்றை செய்ய முடிவு செய்துள்ளார்.
கந்தசாமியை முடித்து விட்டு செல்வராகவன் படத்தில் நடிக்கவுள்ளாராம் சீயான். அதை முடித்து விட்டு சீமானுடன் இணைகிறார். அடுத்தடுத்து மூன்று படங்களும் வருமாம்.
செல்வராகவனும், சீயானும் இணையும் படத்தை கனகதாரா மூவிஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் விஜய்யை வைத்து போக்கிரியைத் தயாரித்தது என்பது நினைவிருக்கலாம்.
சீயான் எப்ப வந்தாலும் சியர்ஸ்தான்!


Click it and Unblock the Notifications











