Vikram: “இவருக்கு 60 வயசா?”.. ரெமோ லுக்கில் கலக்கிய சியான் விக்ரம்!
சென்னை: தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சியான் விக்ரம் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த சிறப்பு நாளில் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், விக்ரம் தனது ரசிகர்களுக்காக அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1966 ஆம் ஆண்டு பிறந்த விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது தீராத காதல் இருந்துள்ளது. இதனால், சினிமா வாய்ப்பு தேடி அலைந்த விக்ரம். "என் காதல் கண்மணி" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம் போன்ற படங்களில் நடித்துவந்த விக்ரமிற்கு ஒரு அடையாளத்தை தந்த படம் தான் 'மீரா' இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் விக்ரம் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.

சியான் விக்ரம்: அதனைத்தொடர்ந்து புதிய மன்னர்கள் போன்ற படங்களில் நடித்து வந்த விக்ரமின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது பாலா இயக்கிய சேது திரைப்படம். அந்த படம், விக்ரமின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுடன் "சியான்" என்ற பெயரையும் ரசிகர்களிடையே நிலைநிறுத்தியது. அதன்பிறகு பல விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்த விக்ரம், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக பல்வேறு பரிமாணங்களில் நடிக்கக்கூடிய நடிகராக கருதப்படுகிறார். ஒருகாலத்தில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்திருந்த விக்ரம், இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பும் நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் அபரிமிதமான காதல் தான்.
வாவ் சூப்பர்: இந்நிலையில், விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் ஒரு க்யூட்டான வீடியோ வைரலாகி உள்ளது. அதில், கூலிங் கிளாஸ் அணிந்து இளமை ததும்பும் தோற்றத்தில் விக்ரம் அன்னியன் பட ரெமோ போல இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விக்ரமிற்கு 60 வயசுனு சொன்னா யாரும் நம்பவே மாட்டாக என ஆச்சரியத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications