எஸ்.ஜே.சூர்யாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. வீர தீர சூரன் விக்ரம் சிலாகிப்பு
சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சித்தா படத்தை இயக்கி கவனம் ஈர்த்த அருண்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக சூர்யாவும், விக்ரமும் முதன்முறையாக இணைந்திருப்பதும் இந்தப் படத்தின் மீது பலரின் கவனம் திரும்புவதற்கு காரணமாக இருக்கிறது. இந்தச் சூழலில் எஸ்.ஜே.சூர்யா குறித்து விக்ரம் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். ஒருபக்கம் தில், தூள், சாமி, ஜெமினி என கமர்ஷியல் ஹிட்டுகளை கொடுத்த அவர் மறுபக்கம் காசி, பிதாமகன், தெய்வ திருமகள் என கதையம்சமும், நடிப்புக்கு தீனியும் உள்ள படங்களில் நடித்தும் வெற்றியை கொடுத்தார். அவர் அளவுக்கு யாராலும் நடிக்க முடியாது என்ற பெயரை பெற்றிருக்கிறார் அவர். முக்கியமாக பல நடிகர்களின் ரசிகர்களும்கூட விக்ரமுக்கு ரசிகர்களாக இருப்பார்கள் என்பதுதான் உண்மை. யாரிடமும் பெரும்பாலும் வெறுப்புத்தன்மையை சம்பாதிக்காமலும், காட்டாமலும் இருப்பவர் அவர்.
வீர தீர சூரன்: இப்போது அவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் துஷாரா, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஒரு கமர்ஷியல் ஹிட்டை கொடுத்து விக்ரம் பல வருடங்கள் ஆகிவிட்டதால் இந்தப் படத்தின் மீது அவர் அதீத நம்பிக்கையை வைத்திருக்கிறார். படமானது மார்ச் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக தங்கள் சியான் விக்ரமுக்கு இது கமர்ஷியல் ஹிட்டை கொடுக்கும் என்று ரசிகர்களும் ஆவலோடு இருக்கிறார்கள்.

கண்டிப்பாக ஹிட்தான்: படத்தின் டீசரும், ட்ரெய்லரும் வெளியாகி சக்கைப்போடு போட்டன. அதனைப் பார்த்த சியானின் ரசிகர்கள் இப்படிப்பட்ட விக்ரமை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என சிலாகித்தனர். அதேபோல் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட விக்ரம், 'இந்தப் படம் சேதுபதி மாதிரி இருக்க வேண்டும்; அதே சமயம் சித்தா ஃப்ளேவரில் இருக்க வேண்டும்' என இயக்குநரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அருண்குமாரும் இந்தப் படம் விக்ரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்று தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
விக்ரமின் பேட்டி: இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம் பல விஷயங்களை பேசினார். அவர் பேசுகையில், "வீர தீர சூரன் படத்தில் தூள், சாமி என என்னை எனது ரசிகர்கள் மாஸாக ரசித்தது போல் நடித்திருக்கிறேன். அப்படித்தான் படமும் உருவாகியிருக்கிறது. இப்போதும் மாஸாகத்தான் நடிக்கிறேன். ஆனாலும் முழுக்க முழுக்க ரசிகர்களின் டேஸ்ட்டுக்காக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
இயக்குநரிடம் சொன்னேன்: இதைத்தான் நான் இயக்குநர் அருண்குமாரிடமும் சொன்னேன். அதாவது என்னுடைய ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை போல்தான் இந்தப் படத்தை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டேன். ரசிகர்கள் ரசிப்பதற்காக அவர்களுக்கேற்ற வகையில் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் நானும் அருணும் வீர தீர சூரனில் முழுக்க முழுக்க பணியாற்றியிருக்கிறோம். இது ஒரு எமோஷனலான படமாக இருந்தாலும்; அனைத்தும் எதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும்.
ரொம்பவே மகிழ்ச்சியடைந்தேன்: இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று உறுதியானது, நான் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் இருக்கும். அனைவருமே நல்லவர்களாகவும் இருப்பார்கள் அதேசமயம் கெட்டவர்களாகவும் இருப்பார்கள். சூர்யாவும் நானும் ஒரே கல்லூரியில்தான் படித்தோம். அவரது இயக்கத்தில் வெளியான வாலி படமும், நான் நடித்திருந்த சேது திரைப்படமும் ஒரே காலகட்டத்தில் வெளியானது. அந்தப் படங்களுக்கு பல விருதுகளை நாங்கள் வென்றோம்.
நடிக்க வந்துவிட்டார்: அதற்கு பிறகு குஷி இயக்கினார். குஷிக்கு பிறகு அவரும் நடிக்க வந்துவிட்டார். அவருடைய நடிப்பை பார்த்து பல முறை ரசித்திருக்கிறேன். ஸ்பைடர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது அந்த ஷூட்டிங் நடக்கும் வழியாக கடந்துசென்றேன். அப்போது அவர் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருப்பதாக சொன்னார்கள். அது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார்.

மார்க் ஆண்டனி டூ டான்வரை: அவர் மாநாடு, மார்க் ஆண்டனி, டான் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். அதை பார்த்தபோது ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டி நிரோ, அல்பசினோ உள்ளிட்டோர் எனக்கு நினைவுக்கு வந்தார்கள். சூர்யாவின் நடிப்பு முழுக்க முழுக்க வித்தியாசமாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு இன்னும் உச்சம் சென்றிருக்கிறது. அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு காட்சி, வசனத்துக்கு தனித்துவத்தை அவர் கொண்டு வந்துவிடுகிறார். அவருடன் பணியாற்றிய அனுபவம் என்னால் மறக்க முடியாதது.
கமர்ஷியல் படம்தான் ஆனாலும்: இந்தப் படம் ஒரு கமர்ஷியல் படம்தான். ஆனாலும் ஒவ்வொரு நடிகரும் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவும் அமைந்திருக்கிறது. இந்தப் படம் பக்கா கமர்ஷியல் ப்ளஸ் மாஸ் படம் இல்லை.ஆனால் மாஸான காட்சிகள் இருக்கும். கமர்ஷியல் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவரை நேரடியாகவோ ராவாகவோ இருக்காது. ஆனாலும் படம் பார்ப்பவர்கள் உணர்வுப்பூர்வமாக படத்துடன் கனெக்ட் ஆகிவிடுவார்கள். அருண்குமாரின் சேதுபதியும், சித்தாவும் கலந்த கலவையாகத்தான் இந்தப் படம் இருக்கும்" என்றார். விக்ரம் அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜே.சூர்யா மாஸ்தான்: முன்னதாக, வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக குஷி படத்தை இயக்கினார். குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அதனைத் தொடர்ந்து நியூ படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார். பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இசை படத்தை இயக்கினார்.
நடிகராக கலக்கும் சூர்யா: இதற்கிடையே கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டி நியூ படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் அதற்கு பிறகு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அப்படி அவர் இறைவி படத்தில் தனது நடிப்பால் அதககளம் செய்தார். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான ராயன், இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள்வரை தொடர்கிறது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் படுதோல்வியை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











