இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்ரம் பிரபு.. சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை : நடிகர் விக்ரம் பிரபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கும்கி என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான விக்ரம் பிரபுவிற்கு, தனது முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. கும்கி படத்தை எழுதி இயக்கியவர் பிரபுசாலமன். அப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடித்திருந்தார்.
தம்பி ராமையா, அஸ்வின் ராஜா போன்ற பல பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் டி இமான். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

பொம்மனாக மிரட்டிய விக்ரம் பிரபு
பொம்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் பிரபுவிற்கு கும்கி படம் நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த புலிக்குத்தி பாண்டி சன் நெக்ஸ்ட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த எதிர்பார்ப்பு
இப்பொழுது இவரது நடிப்பில் டாணாகாரன், பாயும் ஒளி நீ எனக்கு, பொன்னியின் செல்வன் போன்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் டாணாகாரன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும், மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் நடித்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு படம்
"பொன்னியின் செல்வன்" வரலாறு சார்ந்த படம் என்பதாலும் , பல முன்னணி நட்சத்திரங்கள் இணைத்திருப்பதாலும் இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்படம் இந்தாண்டு வெளிவரும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகின்றது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு பல சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளபக்கம் அதிகமாக வராத நடிகர் விக்ரம் பிரபு இன்று இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பிரபலங்கள் வாழ்த்து கூறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா மோத்வானி, ஷ்ரதா ஸ்ரீநாத், மஞ்சிமா மோகன், வாணி போஜன், மடோனா செபஸ்டியன் போன்ற பலரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











