வீர தீர சூரன் படமும் விக்ரமுக்கு அடியா?.. ஒரு வாரத்தில் இவ்வளவுதான் வசூலா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதோ
சென்னை: விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கியிருக்கும் வீர தீர சூரன் பார்ட் 2 கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. இதில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. அதேசமயம் விக்ரமின் ரசிகர்களுக்கு படம் பெரிய திருப்தியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்திருக்கும் சூழலில் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். எந்த கேரக்டராக இருந்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் அவருக்கு கடந்த பல வருடங்களாகவே சொல்லிக்கொள்ளும்படியான கமர்ஷியல் ஹிட் இல்லை. அவரது ரசிகர்களிடம் கேட்டால் அவர்களே கடைசியாக சாமி, அந்நியன் ஆகிய படங்கள்தான் சியானுக்கு வணிக ரீதியான வெற்றிகளை கொடுத்த படங்கள் என்று சொல்வார்கள். ஆனால் விக்ரம் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு பல படங்களில் நடித்துவந்தார்.
தங்கலானும் அடி: அப்படிப்பட்ட விக்ரமை வைத்து பா. இரஞ்சித் தங்கலான் படத்தை இயக்கினார். நிச்சயம் அந்தப் படம் விக்ரமுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது. இனியும் இப்படியே இருந்தால் தன்னுடைய மார்க்கெட் சரிந்துவிடும் என்று சுதாரித்த சியான் ஒரு முழு கமர்ஷியல் படத்தி நடிக்க முடிவெடுத்தார். அதன்படி சித்தா, சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் அவர்.

வீர தீர சூரன்: அதன்படி வீர தீர சூரன் திரைப்படம் உருவானது. இதில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். படமானது கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியானது. அன்றைய தினம் ரிலீஸானாலும் பெரிய பிரச்னைகளையும் சந்தித்தது. கடன் பிரச்னையால் படம் தாமதமாகவே வெளியானது. ஒருகட்டத்தில் படம் வெளியாகாதோ என்றெல்லாம் அவரது ரசிகர்கள் கவலைப்பட தொடங்கிவிட்டார்கள். நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
கலவையான விமர்சனம்: 27ஆம் தேதி மாலைதான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. ஒரே இரவில் நடக்கும் கதைக்களத்தை வைத்து படம் உருவாகியிருந்தது. படத்தை பார்த்த விக்ரம் ரசிகர்களுக்கு முழு திருப்தி கிடைத்தது. இப்படிப்பட்ட விக்ரமை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்று அவர்கள் கூறினார்கள். அதேசமயம் பொதுவான ரசிகர்களிடம் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் இதற்கு முன்னர் வந்த விக்ரம் படத்தின் ரிசல்ட்டுகளுக்கு வீர தீர சூரன் படத்தின் ரிசல்ட் கொஞ்சம் பாசிட்டிவ்வாகவே அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்திருக்கிறது. தற்போது அதன் பாக்ஸ் ஆஃபிஸ் குறித்த நிலவரம் வெளியாகியிருக்கிறது. அதாவது Sacnilk என்கிற வலைதளம் வெளியிட்டிருக்கும் தகவல்கள்படி, நேற்று அந்தப் படம் வெறும் 1.85 கோடி ரூபாயைத்தான் வசூலித்திருக்கிறதாம். முதல் நாளில் டல்லடித்த படத்தின் வசூல் நாட்கள் செல்ல செல்ல உயர்ந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7 கோடி ரூபாய்வரை வசூலித்தது. ஆனால் நேற்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்களிலும் படத்தின் வசூல் அடி வாங்கியிருக்கிறது. அந்த வலைதள தகவல்படி இதுவரை படமானது மொத்தம் 28 கோடி ரூபாய்வரைதான் வசூலித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











