குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படத்தை ஒப்பிட்டு விளாசல்.. நிலைமை கை மீறி போகுதே
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூரிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் களமிறங்குகிறார். நேற்று பெரம்பூரில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு; பரப்புரையும் மேற்கொண்டார். தனது வேட்புமனுவில் மொத்த சொத்து விவரத்தையும் குறிப்பிட்ட விஜய்; தனது தந்தை, தாய், மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு கடன் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அது மேற்கொண்டு விவாதமாகியிருக்கிறது.
அரசியல் கட்சி தொடங்கி தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்திருக்கும் விஜய் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறார். அவரது கட்சியை சேர்ந்து முக்கிய தலைகள் சென்னைக்குள் களம் இறங்கியிருக்கிறார்கள். விஜய்யோ பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளில் களமிறங்கியிருப்பதால் தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தங்கள் தலைவர் போட்டியிடும் இரண்டு தொகுகதிகளிலும் அவரை வெற்றி பெற வைப்பதே முதல் வேலை என களத்தில் இறங்கியுள்ளார்கள்.

வேட்புமனு தாக்கல்: தேர்தல் வேலைகள் எல்லாம் பரபரக்க ஆரம்பித்திருக்கின்றன. விஜய் நேற்று பெரம்பூரில் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு பிறகு அங்கே பரப்புரையும் மேற்கொண்டார். அதில் வழக்கம்போல் திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மேலும் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என கடந்த சில வாரங்களாக எல்லா மேடைகளிலும் பேசுவதையும் நேற்று பரப்புரையில் குறிப்பிட்டார். அங்கு முடித்துவிட்டு கொளத்தூருக்கு சென்று சில நிமிடங்கள் மட்டுமே பேசிய அவர், காவல் துறையினர் ஒத்துழைக்கவில்லை என சொல்லி உடனே முடித்துக்கொண்டார்.
விஜய்யின் சொத்து மதிப்பு: அதுமட்டுமின்றி கொளத்தூர் தவெக வேட்பாளர் பெயரையும் மாற்றி சொல்லி ட்ரோலில் சிக்கினார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவரது சொத்து விவரங்களும் வெளியாகி பேசுபொருளாகியிருக்கிறது. அவர் தனது வேட்புமனுவில் தனக்கு அசையும் சொத்துக்கள் 404 கோடி ரூபாய் இருக்கிறது. அசையா சொத்துக்கள் 92 கோடி ரூபாய்க்கு வாங்கினேன். அதன் இன்றைய சந்தை மதிப்பு 220 கோடி ரூபாய் ஆகும். 2024-25ல் 184 கோடி ரூபாய் வருமானம் வந்தது. இருக்கும் வாகனங்களின் மதிப்பு 7 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்தார்.
குடும்பத்துகே கடன்: அதேபோல் சங்கீதாவுக்கு 12 கோடி ரூபாயும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மூன்று கோடி ரூபாயும், ஷோபாவுக்கு 87 லட்சம் ரூபாயும், ஜேசன் சஞ்சய்க்கு 8 லட்சம் ரூபாயும், மகள் திவ்யா சாஷாவுக்கு நான்கு லட்சம் ரூபாயும் கடன் கொடுத்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். அதை பார்த்த பலரும், மனைவி, மகள், அப்பா, அம்மாவுக்கு கொடுத்த பணத்தைக்கூடவா கடன் லிஸ்ட்டில் சேர்ப்பார். ஏன் இப்படி இருக்கிறார்? என்றெல்லாம் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தவெகவினரும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
கை மீறி போகும் நிலைமை: இந்நிலையில் சிவகார்த்திகேயன், விமல் ஆகியோர் சேர்ந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் சீனை வைத்து விஜய்யை கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள். அதாவது அப்படத்தில் விமலுக்கு தந்தையாக டெல்லி கணேஷ் நடித்திருப்பார். அவர் தன் குடும்பத்துக்காக செலவு செய்யும் அனைத்தையும் நோட்டு போட்டு குறித்து வைத்திருப்பார். அதுமட்டுமின்றி விமலிடம், நீ எனக்கு மொத்தம் 18 லட்சம் கடன் கொடுக்க வேண்டும். அதை கொடுத்துவிட்டு எங்கே வேண்டுமானாலும் போ எனவும் சொல்லும்படி காட்சிகள் அமைந்திருக்கும். அதேபோல் ஒரு சீனில் டெல்லி கணேஷின் மனைவி விமலுக்கு ஃபோன் செய்து, அவர் எனக்கு செலவு செய்ததையும் நோட்டு போட்டு எழுதிருக்காரு டா என்று சொல்வார். அந்த சீன்களை எடுத்துப்போட்டு, 'விஜய் அண்ணா இதை ரியல் வாழ்க்கையில் ரீ க்ரியேட் செய்திருக்கிறார்' என பதீவ்ட்டுவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















