மருத்துவர்களை தாண்டி எனக்கு மருந்தே சுந்தர்.சிதான்.. எமோஷனலான விஷால்
சென்னை: விஷால் நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தை சுந்தர்.சி 12 வருடங்களுக்கு முன்பு இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்த ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள். இதன் காரணமாக படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுந்தர்.சிக்கு விஷால் எமோஷனலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டுகளையும் கொடுத்திருக்கிறார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தார். தொடர்ந்து சர்ச்சைகள், பிரச்னைகளிலும் சிக்கிவந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். அதில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.

மெகா ஹிட்: டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. 100 கோடி ரூபாய்வரை படம் வசூல் செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்தப் படம்தான் விஷாலின் படங்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படம் வெளியானது. மார்க் ஆண்டனி போல் இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் விஷால் மீண்டும் வீழ ஆரம்பித்துவிட்டாரோ என்று பலரும் பேசினார்கள்.
மதகஜராஜா: ஆனால் அந்த சீன்லாம் இங்கே இல்லை என்று வந்திருக்கிறது மதகஜராஜா. சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு உருவானதுதான் அந்தப் படம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் ரிலீஸ் செய்யப்பட்டது. இத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி பொங்கல் வின்னராகியிருக்கிறது. இந்தச் சூழலில் இன்று சுந்தர்.சி தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு விஷால் எமோஷனலாக வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.
விஷால் பதிவு: இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "என்னுடைய சகோதரர், ஃபேவரைட் இயக்குநர், என்னுடைய சிறந்த நண்பர், என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த நபர்களில் ரொம்பவே நல்ல மனிதரான சுந்தர்.சி சாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, ப்ரொப்ஷனல் வாழ்க்கை என இரண்டிலுமே உங்களுக்கு வெற்றி கிடைக்க கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று விரும்புகிறேன். நடிகர் என்பதை தாண்டி உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன்.
பாசிட்டிவிட்டி வரும்: இந்த வருடம் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததற்கு நன்றி. நான் எப்போதும் உங்களை நம்புகிறேன். பாசிட்டிவிட்டி வரும் இடத்தில் பாசிட்டிவான சூழ்நிலை உருவாகும். வாழ்க்கை பாதையில் என்ன வந்தாலும் நான் சந்தோஷமாக இருக்க, அப்படிப்பட்ட வாழ்க்கையை நடத்துவதற்கு என்னுடைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தையும் தாண்டி நீங்கள்தான் என ஒரு மருந்தாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் பிறந்தநாளை நன்றாக கொண்டாடுங்கள். மதகஜராஜா என்ற ப்ளாக் பஸ்டரை கொடுத்து இந்த வருடத்தில் கணக்கை தொடங்கியிருக்கிறீர்கள். இந்த மேஜிக் காம்போ மீண்டும் இணையும் நேரத்துக்கு காத்திருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











