எல்லோருக்கும் பிரச்னை இருக்கு.. போதைக்கு அடிமையாகிட்டேனா?.. உடல்நிலை பற்றி விஷால் விளக்கம்
சென்னை: மதகஜராஜா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டபோது உடல் தளர்ந்தபடி, கைகள் நடுங்கியபடி தோற்றமளித்தார். அதனைப் பார்த்த பலரும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமான யூகங்களை கூறினார்கள். ஆனால் பட ரிலீஸுக்கு பிறகு விஷால் நார்மல் ஆகிவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் இன்று நடிகர் சங்கத்துக்கு வந்த விஷால் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது உடல்நிலை குறித்து விளக்கமளித்தார்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான விஷாலுக்கு கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவரது கரியர் அவ்வளவுதான் என்று பலரும் கூறினார்கள். அதேபோல் சில சர்ச்சைகளையும் தொடர்ந்து சந்தித்தார். இப்படிப்பட்ட சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி விஷாலின் கரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

மதகஜராஜா: அந்தப் படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் அவர் நடித்த ரத்னம் திரைப்படம் வெளியானது. ஆனால் மார்க் ஆண்டனி அளவுக்கு அந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் தோல்வி படம் என்றெல்லாம் அதனை சொல்ல முடியாது. இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் கமிட்டாகி நடித்தார் விஷால். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்திருந்தனர். மேலும் சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
பல வருடங்களுக்கு பிறகு ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் நல்லபடியாக முடிந்தாலும் ரிலீஸ் மட்டும் ஆகாமல் இருந்தது. இதனால் மதகஜராஜா அவ்வளவுதான் என்று விஷால் ரசிகர்கள் முடிவே செய்துவிட்டனர். ஆனால் திடீர் சர்ப்ரைஸாக 13 வருடங்கள் கழித்து இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸானது. பல வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட படம் என்பதால் ஹிட்டாகுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த சந்தேகங்களை எல்லாம் படம் தவிடுபொடியாக்கிவிட்டது. படத்தில் காமெடி, சென்ட்டிமென்ட், ஆக்ஷன் என எல்லாமே செட் ஆகி படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது.
விஷாலின் உடல்நிலை: இதற்கிடையே இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு விஷால் வந்திருந்தபோது அவரது உடல்நிலை ரொம்பவே மோசமாக இருந்தது. உடல் தளர்ந்து, கைகள் நடுங்கியபடி அமர்ந்திருந்தார். அவருக்கு வைரல் காய்ச்சல் என்று சொல்லப்பட்டாலும்; பலரும் தங்களது இஷ்டத்துக்கு விஷாலின் உடல்நிலையை குறித்து வாய்க்கு வந்ததை பேச ஆரம்பித்தார்கள். ஆனால் ரிலீஸுக்கு பிறகு விஷால் பக்காவாகிவிட்டார். இந்நிலையில் இன்று எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சங்கத்தில் இருக்கும் அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார் விஷால்.
செய்தியாளர்களிடம் பேச்சு: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "நான் செய்யும் சமூக சேவைக்கு எம்ஜிஆரும் ஒரு காரணம். மதகஜராஜா படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. எல்லோருக்கும் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்தப் பிரச்னையை எல்லாம் மறக்கும்படியான ஒரு படமாக அமைந்திருக்கிறது மதகஜராஜா. எனது உடல்நிலைக்கு ஒன்றுமே இல்லை. அன்றைய தினம் எனக்கு காய்ச்சல் அடித்தது. ஆனால் 12 வருடங்கள் கழித்து மதகஜராஜா ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்காக நானும், சுந்தர்.சியும் ஏங்கியிருக்கிறோம்.
தெரிந்துகொண்டேன்: அதனால்தான் அன்று காய்ச்சலோடு ப்ரோமோஷனுக்கு வந்தேன். ஆனால் காய்ச்சலால் அன்று உடல்நிலை அப்படி இருந்தது. மற்றபடி எனக்கு நரம்பு தளர்ச்சி, போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்று சொல்வதெல்லாம் சிலரின் கற்பனை. அந்த கற்பனையை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். இருந்தாலும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனது கைகள் நடுங்கிய வீடியோ பயங்கரமாக ட்ரெண்டாகிவிட்டது. அதனையடுத்து பலரும் எனக்கு ஃபோன் செய்தார்கள். அப்போதுதான் என் மீது எத்தனை பேர் அக்கறையாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். அதற்கு நன்றி" என்றார்.


Click it and Unblock the Notifications











