வயநாடு நிலச்சரிவு.. வீண் அரசியல் ஆக்காதீங்க.. மக்களுக்கு உதவுங்க.. விஷால் உருக்கமான கோரிக்கை!
சென்னை: கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக ஒவ்வொரு நாளும் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, குஷ்பு, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் வயநாடு மக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், நிதியுதவிகளையும் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
300க்கும் மேற்பட்டோர் பலி: வயநாடு நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக இதுவரை 316 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பலர் இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாழ்வாதாரமே அழிந்த நிலையில், பரிதவிக்கும் மக்களுக்கு மலையாள நடிகர்கள் பெருமளவில் உதவி வரும் நிலையில், தமிழ் சினிமா நடிகர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

விஷால் உருக்கம்: "நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன கேரளாவில் நடந்த துயர சம்பவம் எல்லோருடைய மனதிலும் மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ள நிலையில். நாம் ஒவ்வொரு நாட்களையும் கடப்பது என்பது மிகுந்த மன வேதனையுடன் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.
இயற்கை முன் மனிதர்கள் எதுவும் செய்ய முடியாது என்றாலும் கூட இந்த துன்பமான நிகழ்வை மனது ஏற்க மறுக்கிறது.
சாதி மத பேதமின்றி இந்நிகழ்வில் அனைவரும் கைகோர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை உறவினர்களை தங்களுடைய இருப்பிடத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அந்த மக்களுக்கு நாம் ஒன்றிணைந்து உதவி செய்வோம்.
இந்த துன்பமான நிகழ்வில் தங்களுடைய உயிரை துச்சம் என நினைத்து மக்களைக் காக்க போராடிவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இந்நிகழ்வினை வீண் அரசியல் ஆக்காமல் மக்களுக்கு உதவிடும் வகையில் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை தீட்டுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்." என நடிகர் விஷால் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











