ஆல் தி பெஸ்ட் டார்லிங்.. செம எனர்ஜி.. விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய விஷால்
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவரும் அவர் தமிழில் கடைசியாக மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அவர் ஏஸ் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவரை சந்தித்தது குறித்து விஷால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.
சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டுமென்று வேட்கையுடன் இருந்த விஜய் சேதுபதிக்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமா பெரிதாக எதையும் கொடுக்கவில்லை. இருந்தாலும் கிடைத்த ரோல்களை எல்லாம் அசால்ட்டாக செய்துகொண்டே இருந்தார். ஒருபக்கம் வெள்ளித்திரை மறுபக்கம் ஷார்ட் ஃபிலிம் என பிஸியாக இருந்த அவரை சீனு ராமசாமி தன்னுடைய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் சேதுவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
வரிசையாக ஹிட்டுகள் கொடுத்த சேதுபதி: அந்தப் படத்துக்கு பிறகு சேது நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ந்து அவரது படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஒவ்வொரு படத்திலும் அவர் தன்னுடைய பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவிரி என அத்தனையிலும் வித்தியாசத்தை காண்பித்தார். அதுமட்டுமின்றி ரம்மி, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் தன்னுடைய நண்பர்களுக்காகவும் நடிக்க ஆரம்பித்தார். அவை தோல்வியைத்தான் சந்தித்தன.

மற்ற மொழிகளில்: அந்த தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அவர் இனி அதுமாதிரியான தவறுகளை செய்யமாட்டேன் என்பதையும் தெளிவுப்படுத்தினார். தொடர்ந்து தரமான கதைகளை தேர்ந்தெடுத்த அவருக்கு; தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பாலிவுட்டுக்கு சென்ற அவர் ஃபர்ஸி வெப் சீரிஸ் நடித்தார். மேலும் ஜவான் படத்தில் வில்லனாகவும், மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் லீடு ரோலையும் ஏற்றார். இதற்கிடையே தமிழிலும் அவர் பேட்டை, விக்ரம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்தார்.
மீண்டும் ஹீரோ: அவர் தொடர்ந்து வில்லனாக நடிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பாததால்; மீண்டும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன்படி தனது 50ஆவது படமாக மகாராஜாவில் நடித்தார். நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த அப்படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அப்படம்; இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியின் ஏஸ்: இப்போது அவர் ஏஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் யோகிபாபு, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஆறுமுக குமார் படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் சூப்பர் அப்ளாஸை அள்ளியது. இப்படமானது மே 23ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மகாராஜா போன்றே இந்தப் படமும் வெற்றி பெறும் என அவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
விஷால் சந்திப்பு: இந்நிலையில் தனது ரசிகர் மன்ற தலைவரின் திருமணத்துக்காக மதுரைக்கு சென்றார் விஷால். இதனையொட்டி சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவர்; அங்கு வைத்து விஜய் சேதுபதியை சந்தித்தார். அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்ட விஷால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை பகிர்ந்து, "என் டார்லிங் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் சந்தித்தேன். அவரை எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சிதான். பயங்கர எனர்ஜியோடு இருப்பார். நான் அவரை சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டன. இந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நடந்தது. ஆனால் அவருடன் உரையாடியது மகிழ்ச்சி. உங்கள் (விஜய் சேதுபதி) எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். மீண்டும் விரைவில் சந்திப்போம் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











