என்னது விஷால் உடம்பில் 109 தையல்களா?.. அஜித்தையே விஞ்சிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி
சென்னை: நடிகர் விஷால் இப்போது ரத்னம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை. படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. ஹரி இயக்கம் என்பதால் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் தனது உடலில் ஏற்பட்ட பிரச்னை குறித்து விஷால் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறஹ்டு.
விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அவரது கரியரிலேயே ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்றால் அது மார்க் ஆண்டனி திரைப்படம்தான். இதனால் விஷால் உற்சாகத்தோடு இருக்கிறார். அதே உற்சாகத்தோடு ஹரி இயக்கத்தில் இப்போது ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இருவரும் இணைந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. எனவே இந்தப் படமும் ஹிட்டாகும் என்று விஷால் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

ட்ரெய்லர் ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸானது. இயக்குநர் ஹரியின் வழக்கமான ஸ்டைலில் படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்திருக்கிறது. ஆனால் போதிய வரவேற்பை படத்தின் ட்ரெய்லர் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படமானது ஏப்ரல் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை விஷால் இதில் தக்க வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
உதவும் விஷால்: இதற்கிடையே விஷால் தன்னால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு தொடர்ந்து செய்துவருகிறார். அதுதொடர்பான வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி ட்ரெண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விஷால் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்ற பேச்சு கடந்த சில காலமாகவே ஓடிக்கொண்டிருந்தது. முக்கியமாக அவர் பாஜகவில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் விஷால் சில மாதங்களுக்கு முன்பு தனது மக்கள் இயக்க கொடியை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் இயற்கை வேறு மாதிரி முடிவெடுத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.
அரசியல் வருகை: சூழல் இப்படி இருக்க விஷால் அரசியலுக்கு வருவது தற்போது உறுதியாகியுள்ளது. அவரே அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அதேசமயம் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும்; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யும் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு போட்டியாக விஷால் இருப்பாரா இல்லை இணைந்து பயணிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஷால் பேட்டி: இந்நிலையில் ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷால் பேசுகையில், "எனது உடம்பில் 109 தையல்கள் இருக்கின்றன. 100ஆவது தையல் போட்டபோது எனது நண்பர்களுக்கு நான் பார்ட்டி வைத்தேன். என் உடம்பில் இருக்கும் இத்தனை தையல்களுக்கு காரணம் கனல் கண்ணன் மாஸ்டர்தான். நான் ஆக்ஷனில் கலக்குகிறேன் என்று பலரும் சொல்வதற்கு கனல் கண்ணனே காரணம்.
சண்டக்கோழி: அவர் சண்டக்கோழி படத்தில் என்னை முழுதாக நம்பினார். சண்டக்கோழி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ஷூட்டின்போது ஒரு கிக் அடிக்கையில் முதல் ரியாக்ஷன் கனல்தான் கொடுத்தார். அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது ஆக்ஷனை பார்த்து கிடைச்சான்யா ஒரு ஜாக்கி சான் என்ற சந்தோஷத்தில் சென்றார்" என்றார்.
அஜித்தையே விஞ்சிட்டாரே?: விஷாலின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக அஜித்தின் உடம்பில்தான் ஏகப்பட்ட தையல்கள் இருக்கும் என்று திரையுலகில் பேச்சு உண்டு. இப்போது விஷால் உடம்பில் 109 தையல்கள் என்றால் அவர் அஜித்தையே விஞ்சிவிட்டாரா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











