இது விஷ்ணுவின் விஸ்வரூபம்... அடுத்தடுத்து 5 மெகா புதுப்படங்கள்!
சென்னை: வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான விஷ்ணு அடுத்தடுத்து 5 புதிய பெரிய படங்களில் நடிக்கிறார்.
குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய விஷ்ணு, இப்போது தன் பெயரை விஷ்ணு விஷால் என மாற்றிக் கொண்டுள்ளார்.

முண்டாசுப்பட்டி
இப்போது இவர் தற்போது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்' பட நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரிக்கும் ‘முண்டாசுப் பட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராம் இயக்குகிறார். இதில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘அட்டக்கத்தி' நந்திதா நடிக்கிறார்.

கலக்குற மாப்புள்ள
அடுத்து மேலும் 4 படங்களில் நடிக்க விஷ்ணு ஒப்பந்தமாகியுள்ளார். ‘எத்தன்' படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் ‘கலக்குற மாப்புள்ள' என்ற படத்தில் நடிக்கவிருக்கவிருக்கிறார். இந்த படத்தில் பிந்து மாதவி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் ஜி.வி.ஜி. ஸ்ரீநாத் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.

வீர தீர சூரன்
விஷ்ணுவை அறிமுகப்படுத்திய சுசீந்திரன் இயக்கும் ‘வீரதீர சூரன்' என்ற படத்திலும் விஷ்ணு நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சுசீந்திரன் தற்போது விஷால் நடிக்கும் ‘பாண்டிய நாடு' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிறகு விஷ்ணுவை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார்.

இடம் பொருள் ஏவல்
இதுமட்டுமல்லாமல், இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் தயாரிக்கும் ‘இடம் பொருள் ஏவல்' ஏன்ற படத்திலும் விஷ்ணு நடிக்கவுள்ளார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தில் விஷ்ணுவுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இருவரும் சீனுராமசாமியின் படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 வது படம்
மேலும், நகுல் நடிப்பில் வெளியான ‘நான் ராஜாவாக போகிறேன்' என்ற படத்தை தயாரித்த சந்திரன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க விஷ்ணு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
வளர்ந்து வரும் ஒரு ஹீரோ ஒரே நேரத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











