என்னாச்சு சல்மான் கானுக்கு?.. திடீரென மாறிய தோற்றம்.. ரசிகர்களை குழப்பிய புதிய ஹேர் ஸ்டைல்!
மும்பை: பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக வலம் வரும் சல்மான் கான், தனது புதிய ஹேர் ஸ்டைலால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது புதிய ஹேர் ஸ்டைல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பல்வேறு யூகங்களும் கிளம்பியுள்ளன.
பாலிவுட்டில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வரும் சல்மான் கான், தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் கம்பீரமான தோற்றத்திற்காக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இப்படி இருக்கையில், நடிகர் அமீர் கான் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் அவர் தோன்றிய விதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற 'லகான்' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சல்மான் கான், மிகவும் குறுகிய 'பஸ் கட்' ஹேர் ஸ்டைலில் தோன்றினார். அதோடு லெதர் ஜாக்கெட் அணிந்து மாஸாக என்ட்ரி கொடுத்த அவர், அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் கவனத்தை முழுமையாக கவர்ந்தார்.

சல்மான் கானின் இந்த புதிய தோற்றம் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இது புதிய படத்திற்கான லுக்கா? அல்லது உடல்நலப் பிரச்சினை காரணமாக மேற்கொள்ளப்பட்ட மாற்றமா? என்று விவாதங்கள் கிளம்பியுள்ளன.
காரணம் என்ன?: ஏற்கனவே சில உடல்நலப் பிரச்சினைகள் குறித்து சல்மான் கான் வெளிப்படையாக பேசியிருந்ததால், அவரது புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகாததால், பலரும் யூகங்களையே முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே, 'தேரே நாம் 2' திரைப்படத்திற்காக இந்த தோற்றத்தை சல்மான் கான் தேர்வு செய்திருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது அடுத்த ஆக்ஷன் படத்திற்கான தயாரிப்பாகவும் இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் ஆர்வம்: கடந்த காலங்களில் 'தேரே நாம்', 'சுல்தான்' உள்ளிட்ட படங்களுக்காக சல்மான் கான் தனது தோற்றத்தில் பெரிய மாற்றங்களை செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் தற்போது மீண்டும் புதிய ஹேர் ஸ்டைலில் தோன்றி இணையத்தை கலக்கி வருகிறார். எது எப்படியோ, சல்மான் கானின் இந்த புதிய தோற்றம் தற்போது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளதுடன், அதன் பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications