Dhurandhar 2: துரந்தர் 2வை கொண்டாடும் டோலிவுட் ஹீரோக்கள்.. கப்சிப் மோடில் கோலிவுட் ஹீரோக்கள்.. ஏன்?
சென்னை: ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் நேற்று முன் தினம் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோக்களுடன் உலகம் முழுவதும் வெளியானது. இதுவரை சுமார் 200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், துரந்தர் 2 படத்தை பாலிவுட் பிரபலங்கள் பெரிதாக கொண்டாடாத நிலையில், டோலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து புகழ்ந்து ட்வீட்களை போட்டு வருவது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

அல்லு அர்ஜுன் தனது புதிய தியேட்டரில் துரந்தர் 2 படத்தை வெளியிட்ட நிலையில், முதல் ஆளாக படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்தார் எனக் கூறப்பட்ட நிலையில், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் மற்றும் தற்போது ராம் சரண் என பலரும் துரந்தர் 2 படத்தை பாராட்டியுள்ளனர்.
துரந்தர் 2வுக்கு டோலிவுட் பிரபலங்கள் பாராட்டு: ஆதித்யா தர் தயாரித்து இயக்கியுள்ள துரந்தர் 2 படத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம் பால் மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியாவின் பெருமை என்றும் தேசப்பற்றுக் கொண்ட ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய படம் என்றும் டோலிவுட் பிரபலங்களான அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் படத்தின் இயக்குநர் ஆதித்யா தர்ரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். மேலும், சக நடிகரான ரன்வீர் சிங் இந்த படத்துக்காக போட்டுள்ள கடுமையான உழைப்பையும் பாராட்டியுள்ளனர்.

பாலிவுட் பிரபலங்கள் சைலன்ட்: ஆனால், ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன் முதல் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலரும் படத்தை பார்த்து இதுவரை பாராட்டியது போல தெரியவில்லை. பாலிவுட்டில் இதுவரை வெளியான 3 கான்களின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை எல்லாம் இந்த படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிலும் கப்சிப்: அதே போல கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இதுவரை துரந்தர் 2 படத்திற்கு எந்தவொரு ட்வீட்டும் போட்டு வாழ்த்தவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமின்றி கன்னட நடிகர்கள் யஷ், ரிஷப் ஷெட்டி போன்றவர்களும் மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் அமைதியாகவே உள்ளனர்.
ரசிகர்களை கவர: தெலுங்கு நடிகர்கள் திடீரென துரந்தர் 2 படத்துக்கு பாராட்டு தெரிவிக்க முக்கிய காரணமே பாலிவுட் ரசிகர்களை கவர்வதற்காகத்தான் என்றும் ஆதித்யா தர் இயக்கத்தில் அடுத்து தாங்களும் நடிக்க வேண்டும் என்பதற்காக ஐஸ் வைக்கின்றனரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாலிவுட் நடிகர்கள் மற்றும் கோலிவுட் நடிகர்கள் இதை பிரச்சார படம் என்பதால் பாராட்டவில்லையா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இயக்குநர் ஷங்கர் மட்டுமே கோலிவுட்டில் இருந்து துரந்தர் 2 படத்தை பார்த்து மனதார பாராட்டியுள்ளார். அதற்கு காரணம் ரன்வீர் சிங்கை வைத்து அவர் வேள்பாரி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர். அந்நியன் இந்தி ரீமேக் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











