ஆமா.. இவ்ளோ திமிரா தம்மடிக்கிற போஸ் தரும் தனுஷை கேட்பாரில்லையா?
ரஜினி, அஜீத், விஜய், சூர்யா... இவர்களில் யாராவது சிகரெட் புகைப்பது மாதிரி படங்களில் தோன்றினால் அதற்கு கிளம்பும் எதிர்ப்பு கொஞ்சமல்ல. சமூகக் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பலரும் விழுந்து விழுந்து அறிக்கை விடுவதைப் பார்த்திருக்கிறோம்.
பாபா படத்தோடு புகைக்கும் காட்சிகளுக்கு விடை கொடுத்தார் ரஜினி. இனி படங்களில் புகைக்கும் காட்சியே வைக்க மாட்டேன் என அவர் அறிவித்தும் விட்டார். பாமக போன்ற கட்சிகள், இளம் நடிகர்கள் ரஜினியைப் பின்பற்றுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது.

அஜீத்துக்கும் பாமக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு கிளம்ப, அவர் அசல் படத்தோடு புகைப்பதை நிறுத்தினார்.
அடுத்து விஜய். இவர் துப்பாக்கி படத்தில் சுருட்டோடு காட்சி தர, அதற்கு பாமகவும் பிற அமைப்புகளும் கடும் எதிர்ப்பு காட்டின. அதன் பிறகு, இனி புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அறிக்கை விட்டார்.
இப்படியொரு நிலை வரும் அளவுக்கு வைத்துக் கொள்ளவில்லை சூர்யா. அவர் பெரும்பாலும் நல்ல பிள்ளையாகவே நடித்துவிடுவதால் அவருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இப்போதைய அவர் படங்களில் புகைக்கும் காட்சிகள் கிடையாது.
கமல் ஹாஸன் இந்த விஷயத்தில் ரொம்ப க்ளீன். அவர் ரொம்ப வருஷங்களாக புகைக்கும் காட்சிகளில் நடிப்பதையே விட்டுவிட்டார். நிஜத்திலும் அவர் புகையை விட்டு ரொம்ப நாட்களாயிற்று.
இப்படி முதல் நிலை ஹீரோக்கள் யாருமே புகைக்கும் காட்சிகள் வேண்டாம் என விடைகொடுத்த நிலையில், தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ் தன் வேலையில்லா பட்டதாரி படத்துக்காக கொடுத்துள்ள போஸ்கள் கடுப்படிக்கின்றன.
ரொம்பத் திமிராக (வேலை வெட்டி இல்லேன்னா அப்படித்தான் இருப்பாங்களாம்!) தம்மடிக்கிற மாதிரி அவரது படங்கள் இடம்பெற்றுள்ள போஸ்டர்களும், டீசர்களும்தான் இப்போது இணையதளங்களில் பரவிக் கிடக்கின்றன. இதற்கு இதுவரை எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை.
விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணையானவர் இல்லை தனுஷ் என்ற நினைப்பில் பாமக உள்ளிட்டோர் விட்டுவிட்டார்களா.. அல்லது இன்னும் யார் கவனத்துக்கும் வரவில்லையா!


Click it and Unblock the Notifications











