விஜய்யை அரியணையில் அமர வைத்த 'அண்ணன்' சென்ட்டிமென்ட்.. தங்கைகளே துணை.. திருப்பம் தந்த திருப்பாச்சி

சென்னை: விஜய்யை பல பெண்கள் இன்று அண்ணனாக பார்த்துவருகிறார்கள். தங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் துணையாக அண்ணன் இருக்கிறார் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. விஜய் இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என கருதப்படுகிறது. எப்படி அவரால் இப்படி பெண்கள் மத்தியில் இடம்பெற முடிந்தது?..

திமுகவினருக்கு எப்படி பேரறிஞர் அண்ணாவோ; தவெகவினருக்கு விஜய் அண்ணா. கொள்கை ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் இரண்டு பேருக்கும் மலையளவு வித்தியாசம் இருந்தாலும்; தவெகவை சேர்ந்தவர்களுக்கு விஜய்தான் பேரறிஞர், மூதறிஞர் எல்லாம். குறிப்பாக பெண்களை பொறுத்தவரை, 'எங்களுக்கு ஒன்னுனா எங்கள் அண்ணன் வருவார்' என்று மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

Why Thousands of Women See Vijay as Their Anna The Story Goes Back to Thirupaachi
Photo Credit:

இதுதான் காரணம்: விஜய்யின் திரை கரியரை எடுத்துக்கொண்டால்; ஒருதலை காதல் செய்யும் இளைஞன், காதல் தோல்வியடைந்த இளைஞன் என்ற ரீதியில்தான் ஆரம்பகாலத்தில் பெண்களிடம் கனெக்ட் ஆனார். கமர்ஷியல் ரூட்டுக்கு சென்ற பிறகு இளைஞர்களை எப்படி கவர்ந்தாரோ அதேபோல் பெண்களுக்கு அண்ணன் என்ற இடத்தில் அமரக்கூடிய ஃபார்முலாவை பிடித்தார். அதற்கு தீனி போடும் வகையில் அமைந்த திரைப்படம் திருப்பாச்சி.

திருப்பம் தந்த திருப்பாச்சி: பேரரசு இயக்கியிருந்த அந்தப் படம் அண்ணன் - தங்கை சென்ட்டிமென்ட்டை மையமாக கொண்டது. தமிழ்நாட்டில் இந்த ஃபார்முலா எவர்க்ரீன் ஹிட் ஃபார்முலா. ஆக்‌ஷன், சென்ட்டிமென்ட், காமெடி என அத்தனையும் கலந்த பேக்கேஜாக உருவாகியிருந்த திருப்பாச்சி விஜய்க்கு பெரிய திருப்பம் தந்தது. கில்லிக்கு பிறகு திரிஷாவுடன் சேர்ந்து நடித்த இரண்டாவது படம் இது. இந்தப் படமும் அவர்கள் ஹிட் லிஸ்ட்டில் சேர்த்து; அவர்களை ராசியான ஜோடியென மீண்டும் காட்டியது. பத்து பேரை அடிக்கும் இளைஞன் மட்டுமில்லை; வீட்டுக்கும், தங்கைக்கும் பொறுப்பாக இருக்கக்கூடிய அண்ணன் என்ற பிம்பத்தை அவருக்கு உருவாக்கவும் செய்தது.

உருகிப்போன பெண்கள்: அப்படத்தில் விஜய் தன் தங்கையிடம் காட்டும் பாசத்தையும், தங்கைக்காக எடுக்கும் அவதாரத்தையும் பார்த்து; எங்கள் வீட்டில் இருக்கும் அண்ணன் செய்ய முடியாததை எல்லாம் விஜய் அண்ணன் செய்கிறாரே என்ற உணர்வோடு ஏற்றுக்கொண்டார்கள். இப்படி ஒரு அண்ணன் நமக்கு இல்லையே என ஏங்கி உருகிப்போனார்கள். உளவியல் ரீதியாக பல பெண்களிடம் இளைய தளபதி விஜய் இப்படித்தான் அண்ணன் விஜய்யாக மாறினார்.

Why Thousands of Women See Vijay as Their Anna The Story Goes Back to Thirupaachi
Photo Credit:

அந்த சீனுக்கெல்லாம்: இன்றுவரை அண்ணன், தங்கை பாசத்தை சொல்லும் பாடல்களில், 'என்ன தவம் செஞ்சுப்புட்டோம் அண்ணன், தங்கை ஆகிப்புட்டோம்' பாடலும் இருக்கத்தானே செய்கிறது. அண்ணன் இடத்தை ஐந்து நிமிடங்கள்கூட விட்டுவிடவே கூடாது என பாடலிலும் கவனம் செலுத்தியதை வைத்தே புரிந்துகொள்ளலாம்; விஜய் ஒரு ஃபார்முலாவை எடுத்துக்கொண்டால் அதை வைத்து அத்தனை ஏரியாக்களிலும் சொல்லி அடிக்கும் கில்லி என்பதை.

Why Thousands of Women See Vijay as Their Anna The Story Goes Back to Thirupaachi
Photo Credit:

தங்கைக்கு பிரச்னை வந்த நேரத்தில் சரியாக வீட்டு வாசலில் அண்ணன் நின்றால் யார்தான் உருகிப்போய் தன் உணர்வு, ஜீவனை அந்த அண்ணனுக்கு கொடுக்கமாட்டேன் என்பார்கள். அந்த எக்ஸ்ட்ரீம் எமோஷனலையும் படத்தின் ஒரு சீனில் வைத்து பேரரசு கொடுக்க; விஜய்க்கு பெண்களின் பெரும்படையே உருவானது.

Also Read
பெண்கள், குழந்தைகள்தான் டார்கெட்.. சினிமாவில் விதைத்து அரசியலில் அறுவடை செய்த விஜய்!
பெண்கள், குழந்தைகள்தான் டார்கெட்.. சினிமாவில் விதைத்து அரசியலில் அறுவடை செய்த விஜய்!

படம் முழுக்க பலம்தான்: தங்கைக்காக இன்னொரு பெண்ணின் முடியை அறுப்பது, அண்ணனின் சட்டையை போட்டுக்கொண்டு தங்கை உருகுவது, தங்கையின் பிரச்னைக்காக வன்முறையை ஆரம்பித்து அதன் மூலம் ரவுடிகளை ஒழிப்பது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருப்பார்கள். படத்தில் விஜய் அப்படியெல்லாம் செய்யும்போது; பாசமலர் சிவாஜி தங்கைக்காக அழுதார், திருப்பாச்சி விஜய்தான் தங்கைக்கு நடக்கும் அநியாயங்களை அழித்தார். அத்தனையையும் செய்கிறார் என்ற விதை விழுந்தது. அந்த விதை இன்று காடாக மாறியிருக்கிறது.

Why Thousands of Women See Vijay as Their Anna The Story Goes Back to Thirupaachi
Photo Credit:

கான்ஷியஸான விஜய்: விஜய் வெறும் கமர்ஷியல் நடிகர் என்ற கூற்றெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதது. அவர் வெறும் கமர்ஷியல் ஹீரோவாக மட்டும் இருந்திருந்தால் இவ்வளவு தூரமெல்லாம் வந்திருக்க முடியாது. கமர்ஷியலோடு சேர்த்து எதை கொடுத்தால் தன்னால் அனைவரிடமும் சேர முடியும் என்பதை உணர்ந்த நடிகர். அதை எந்த தயக்கமும் இல்லாமல் அமல்படுத்தி இன்று அரியணை ஏறியிருக்கிறார். திருப்பாச்சிக்கு பிறகும்கூட வேலாயுதம், பிகில் படங்களிலும் அதே ஃபார்முலாவை செயல்படுத்தினார். அவை அனைத்துக்கும் கடந்த மாதத்தில் பலனும் கிடைத்துவிட்டது.

Why Thousands of Women See Vijay as Their Anna The Story Goes Back to Thirupaachi
Photo Credit:

கண்ணை மூடி நம்பும் பெண்கள்: விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே தவெக ஆதரவு இளம்பெண்கள் பேச்சில் விஜய் அண்ணாதான் எல்லாமே என்பதை பார்க்கலாம். சங்கீதா பிரச்னையில் எல்லாம் ஒரு இளம்பெண் எல்லை மீறி அநாகரீகமான கருத்தை தெரிவித்துவிட்டு அது தவறென்றுகூட தெரியாமல்; எந்தவித சங்கடமும் இல்லாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த அளவுக்கு விஜய் மீது வெறித்தனமான உணர்வொன்றை வைத்திருக்கிறார்கள். அந்த உணர்வுகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு இருக்கிறது. சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படை, அண்ணன் சீர், தாய்மாமன் சீர் என அரசியலுக்கு வந்த பிறகும் அவர் பெண்களிடம் தன்னுடைய அண்ணன் பிம்பத்துக்கான ஆணியை இறுக்கமாக அடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்த ஆணியை வெறும் பிம்பத்துக்காக இல்லாமல் உண்மையான மாற்றத்துக்கும் அடித்தால் விஜய்க்கு இந்த பெண்கள் படை இன்னும் சில தேர்தலுக்கு துணை நிற்கலாம். திரையில் தங்கைகளுக்கு துணையாக இருந்தது மாதிரி; தரையிலும் விஜய் துணையாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X