விஸ்வாசம் ரிலீசில் சிக்கல்.. விஜய் சேதுபதி, சிவா போல் அதிரடியாக முடிவெடுப்பாரா தல?
சென்னை: கடன் பிரச்சினையால் விஸ்வாசம் ரிலீசில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க நடிகர் அஜித் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
96 படத் தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு கடன் பிரச்சினை இருந்ததால், அப்படம் ரிலீசாவதில் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அப்படத்தில் நாயகனாக நடித்த விஜய்சேதுபதி, கடனுக்கு உத்தரவாதம் அளித்ததுடன், சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை விட்டுக் கொடுப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து நடிகர் விஷால் கடன் பிரச்சினை தொடர்பாக சில முடிவுகளை எடுத்து, பட ரிலீசுக்கு வழிவகுத்தார். இதேபோலத் தான் நடிகர் சிவகார்த்திக்கேயனின் சீமராஜா படத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போதும், சிவகார்த்திக்கேயன் உத்தரவாதம் அளித்ததன் பேரில் படம் ரிலீசானது.
இந்நிலையில், அஜித்தின் விஸ்வாசம் படம் அதே போன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்று இருந்த கடன் பாக்கி 78 லட்சம் ரூபாயை திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்குத் தொடர்ந்தார். இதனால் அந்த பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாக்கி தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதம் உள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து, தடையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இதனால், அஜித்தும் விஜய் சேதுபதி, சிவகார்த்திக்கேயன் போன்று விநியோகஸ்தரின் கடனுக்கு உத்தரவாதம் அளித்து பட ரிலீசிற்கு உதவி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











