குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா ரெட்ரோ?.. கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கையே இந்த சூர்யா படம் தான்!
சென்னை: வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் ரெட்ரோ படத்துக்கான முன்பதிவுகள் தொடங்குகின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகை ஸ்ரேயா சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, பிரியா வாரியர், பிரசன்னா, சுனில், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி 14வது நாளான நேற்று வெறும் 1 கோடி ரூபாய் அளவுக்குத்தான் வசூல் செய்துள்ளது.

இந்த வாரம் புதிதாக கேங்கர்ஸ் மற்றும் சுமோ படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமிக்க உள்ள நிலையில், குட் பேட் அக்லி வசூல் மொத்தமாக குறைந்துவிடும் என்றே தெரிகிறது.
250 கோடி ரூபாயை கடக்குமா?: ஆதிக் ரவிச்சந்திரனின் ஃபேன் பாய் சம்பவமாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 140 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியளவில் 143.13 கோடி வசூல் என sacknilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. 14வது நாளான நேற்று மட்டும் குட் பேட் அக்லி 1.19 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதியில் மீண்டும் வசூல் அதிகரித்தால் மட்டுமே 250 கோடி வசூலை குட் பேட் அக்லி கடக்கும் என்கின்றனர்.
ரெட்ரோ புக்கிங் எப்போ?: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா கேங்ஸ்டராக நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. அதே நாளில் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சில ரீ ரிலீஸ் படங்களும் படையெடுக்க காத்திருக்கின்றன. இந்நிலையில், வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் ரெட்ரோ படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?: நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியானது. அந்த படம் முதல் நாளில் இந்தியளவில் 22 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் 58 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டியது. ஆனால், படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூல் ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டது. அதிகபட்சமாக 107 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரெட்ரோவின் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தான் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் சரிவர தெரிய வரும். பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்களின் கணிப்பின்படி ரெட்ரோ முதல் நாள் வசூல் உலகளவில் 20 முதல் 30 கோடி வரை வரும் என்கின்றனர்.
குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா?: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த படங்களாக அஜித் குமாரின் விடாமுயற்சி, பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படங்கள் உள்ளன. 200 கோடி ரூபாயை குட் பேட் அக்லி கடந்துள்ளது. அந்த படம் 250 கோடி ரூபாய் வரை வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரெட்ரோ படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தால் கூட அந்த படம் அதிகபட்சமாக 150 கோடி முதல் 200 கோடி தான் வசூல் ஈட்டும் என்றும் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்க வேண்டும் என்றால் படம் எக்ஸ்ட்ராடினரியாக இருக்க வேண்டும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











